வேலூர் மாவட்டம் அரக்கோணம் ரயில் நிலையம் அருகே பாழடைந்த கிணறு ஒன்று உள்ளது. அந்தப் பகுதியில் கட்டிட பணி நடைபெற்று வருகிறது. இதற்கு தேவையான நீரை அந்த கிணற்றிலிருந்து கட்டிட பணியாளர்கள் எடுத்து வந்தனர்.
இந்த நிலையில், பணியாளர்கள் கிணற்றில் தண்ணீர் இறைக்க முற்பட்டபோது பச்சிளம் குழந்தை ஒன்று இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அரக்கோணம் நகர காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அந்தக் கிணறு 80 அடி ஆழம் என்பதால், தீயணைப்புத்துறை உதவியுடன் ஒரு மணிநேர போராட்டத்துக்கு பிறகு குழந்தையை எடுக்கப்பட்டது.
பின்னர், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் குழந்தையை கிணற்றில் வீசி சென்றவர் யார்? என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில், கிணற்றில் வீசப்பட்டிருப்பது பிறந்து சில மணி நேரங்களே ஆன பெண் குழந்தை என தெரியவந்துள்ளது.
பச்சிளம் குழந்தையை பாழடைந்த கிணற்றில் வீசி விட்டுச் சென்ற கொடூர சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.