வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த குரிசிலாப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் முருகன் (32). கூலித் தொழிலாளி. இவரது மனைவி ஆந்திர மாநிலம் குப்பம் அடுத்த நூல் குண்டா கிராமத்தைச் சேர்ந்த சின்னபாப்பா (26). இவர்களுக்கு பாரதி லட்சுமி (8), தமிழ் (3) என்ற இரு பிள்ளைகள் உள்ளன.
இந்நிலையில், முருகன் தன் மனைவியின் நடத்தை மீது சந்தேகம் அடைந்து தினசரி தன் மனைவியுடன் சண்டையிட்டுள்ளார். இதனால், சின்னபாப்பா பல மாதங்களாக தன் தாய் வீட்டில் இருந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த முருகன், மனைவியை தீர்த்துக்கட்ட திட்டம் தீட்டினார்.
அதன்படி, நேற்று (திங்கட்கிழமை) சின்னபாப்பாவின் வீட்டிற்கு சென்று இனி நல்ல முறையில் வைத்துக்கொள்ளுவதாக கூறி தன் வீட்டிற்கு அழைத்து வந்து இன்று காலை வீட்டினுள் சின்னபாப்பாவை சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் உடல்களை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக, திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்தக் கொலை சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.