வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த ஓலக்காசி ரோடு இந்திரா நகரைச் சேர்ந்தவர் மதிவாணன். இவரது மனைவி கனிமொழி (37). இந்தத் தம்பதியினருக்கு திருமணமாகி 20 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். மதிவாணன் குடி பழக்கத்திற்கு அடிமையாக இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று மது அருந்துவதற்காக தனது மனைவி கனிமொழியிடம் மதிவாணன் பணம் கேட்டு தகராறு செய்துள்ளார்.
கனிமொழி பணம் கொடுக்க மறுக்கவே, இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி, ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த மதிவாணன், கனிமொழியை கொடூரமாக தாக்கியதுடன் வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை எடுத்து அவரது உடல் முழுதும் ஊற்றி, தீ வைத்துவிட்டு அங்கிருந்து இருசக்கர வாகனத்தில் தப்பி ஓடிவிட்டார்.
இதற்கிடையே, கனிமொழியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவரை மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காததால் கனிமொழி பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவம் தொடர்பாக குடியாத்தம் டவுன் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த மதிவாணனை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் இன்று பேர்ணாம்பட்டு கொண்டமல்லி சுடுகாட்டில் உள்ள மரக்கிளையில் வேட்டியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட நிலையில் மதிவாணன் சடலமாக மீட்கப்பட்டார். இதனையடுத்து காவல் துறையினர் மதிவாணன் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
மதுப்பழக்கத்தால் 20 ஆண்டுகள் குடும்பம் நடத்திவந்த மதிவாணன் தனது அன்பான மனைவியை எரித்துக் கொன்றதுடன் தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குடியாத்தம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது