வேலூர்: கே.வி.குப்பம் அடுத்த வடுங்கன்தாங்கள் பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி விநாயகம் (24). இவரும் குடியாத்தம் அடுத்த தர்ணம்பேட்டை சேர்ந்த சுப்ரஜாவும் (24) காதலித்து கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு தற்போது ஒன்னறை வயதில் ஒரு குழந்தையும் உள்ளது.
இந்நிலையில், சுப்ரஜாவின் அத்தை தனலட்சுமி என்பவர் கே.வி.குப்பம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், “கடந்த 3 மாதங்களாக சுப்ரஜாவை தொடர்புகொள்ள முடியவில்லை, அவரை காணவில்லை. இது குறித்து அவரது கணவர் விநாயகத்திடம் கேட்டால் உரிய பதில் அளிக்காமல் விரட்டியடிக்கிறார். எனவே சுப்ரஜாவை கண்டுபிடித்து தரவேண்டும்” என கேட்டுக்கொண்டார். இதன் அடிப்படையில் விநாயகத்தை காவல் துறையினர் அழைத்து விசாரித்தபோது அவர் கூறிய தகவலை கேட்டு அதிர்ந்து போயுள்ளனர்.
விநாயகமும்- சுப்ரஜாவும் காதலித்து திருமணம் செய்திருந்தாலும் விநாயகத்துக்கு வேறு ஒரு பெண்ணுடன் தகாத உறவு இருந்துள்ளது. இது மனைவி சுப்ரஜாவுக்குத் தெரியவரவே இது தொடர்பாக அடிக்கடி இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் தம்பதிக்கு இடையில் ஏற்பட்ட தகராறில் விநாயகம் சுப்ரஜாவை தாக்கியுள்ளார்.
இதில் சுப்ரஜா மயக்கமடையவே அவரை சமாதானப்படுத்தி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதாக கூறி அழைத்துச் சென்று வடுங்கன்தாங்கள் - முடினாம்பட்டு செல்லும் சாலையிலுள்ள சர்கார் தோப்பு என்ற வனப்பகுதியில் விநாயகம், விநாயகத்தின் சகோதரன் விஜய், 17 வயது சகோதரன் ஆகியோர் சுப்ரஜாவை அடித்து கொலை செய்துவிட்டு அங்கேயே புதைத்தது விசாரணையில் தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து விநாயகம், விஜய், 17 வயது சிறுவன் உள்ளிட்ட 3 பேரை கைது செய்த காவல் துறையினர் அவர்கள் மீது கொலை வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து, நேற்று (மார்ச் 29) பெண்ணை புதைத்த இடத்திற்கு நேரில் சென்ற காவல் துறையினர், கே.வி.குப்பம் வட்டாட்சியர் சரண்யா, குடியாத்தம் டிஎஸ்பி ராமமூர்த்தி, வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை குழு மற்றும் வனத்துறையினர் சுப்ரஜாவின் உடல் தோண்டி எடுத்தனர்.
![கைது செய்யப்பட்டவர்கள்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/14875322_img.jpg)
தொடர்ந்து அவரது உடலை உடற்கூராய்வுக்காக அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கைதான கணவர் விநாயகம், விஜய் உள்ளிட்ட 3 பேரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: சிவகங்கை ரௌடி கொலை - 24 மணிநேரத்தில் கொலையாளிகள் கைது