வேலூர் அருகே அப்துல்லாபுரம் பகுதியில் குடோன் ஒன்றில் நேற்று விரிஞ்சிபுரம் காவல்துறையினர் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர். அப்போது குடோன் உரிமையாளர் சக்திவேல் உள்பட 5 பேரை விசாரணைக்காக காவல்துறையினர் அழைத்துச் சென்றனர். அதில் சக்திவேல் விசாரணைக்கு ஒத்துழைக்காமல் காவலர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்கில் திடீர் திருப்பமாக 13 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து வேலூர் மாவட்ட காவல்துறையினர் கூறுகையில், வேலூர் சுண்ணாம்புக்கார தெருவை சேர்ந்தவர் ஜீவாராம். இவர் பெங்களூரில் இருந்து தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் கொண்டுவந்து வேலூரில் பல்வேறு இடங்களில் பதுக்கி வைத்து வியாபாரம் செய்து வந்துள்ளார்.
வேலூர் அடுத்த அப்துல்லாபுரம் பகுதியில் சக்திவேலுக்கு சொந்தமான குடோனில் குட்கா பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. சக்திவேல் குடோனில் இறக்குவதற்காக பெங்களூரிலிருந்து லாரி மூலம் 200 அட்டை பெட்டிகளில் குட்கா பொருள்கள் ஏற்றிவந்துள்ளனர். அர்ஜூனன் என்பவர் அந்த வண்டியை ஓட்டி வந்துள்ளார். அப்போது கிருஷ்ணகிரியை சேர்ந்த குமார், முரளி, பிரவீன், கவுரப்பன் ஆகிய 4 பேரும் காரில் குட்கா வண்டியை பின் தொடர்ந்துள்ளனர்.
பின்னர் லாரியை வழி மறைத்து குமார் தன்னை பத்திரிகையாளர் என்று காட்டிக்கொண்டு லாரியில் இருந்தவர்களிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளார். அதற்கு அர்ஜுனன் பணம் கொடுக்க மறுக்க, இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
பின்னர் அர்ஜுனன், மாதனூர் வழியாக சென்றபோது இருசக்கர வாகனம் மீது மோதியுள்ளார். அப்போது அங்கு ஏற்பட்ட பிரச்னை தொடர்பாக பொதுமக்கள் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர், வண்டியை சோதனை செய்தபோது, உள்ளே குட்கா பொருட்கள் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து வண்டியை பறிமுதல் செய்து விசாரணை நடத்தியுள்ளனர்.
அர்ஜுனன் அளித்த தகவலின் பேரில் அப்துல்லாபுரம் குடோனுக்கு குட்கா பொருட்கள் கொண்டு செல்ல இருந்தது தெரியவந்தது. இதையடுத்து விரிஞ்சிபுரம் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் அப்துல்லாபுரம் குடோனில் நேரில் சென்று ஆய்வு செய்தபோது ,அங்கு இரண்டு டாட்டா ஏசி வண்டிகளில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை ஏற்றிச் செல்ல இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து குடோனின் உரிமையாளர் சக்திவேல் மற்றும் குட்கா பொருட்களை வண்டிகளில் ஏற்றி வந்த டிரைவர் அர்ஜுனன், வினோத்குமார், தொழிலாளர்கள் பூவரசன், பிரசாந்த், பிரதீப், ஜிஜேந்தர் குமார், சிக்னாராம் ஆகிய 8 பேரை விரிஞ்சிபுரம் காவல்துறையினர் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் மீது போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையில் அர்ஜூனன் அளித்த தகவலின் பேரில் பத்திரிக்கையாளர் என்ற போர்வையில் பணம் கேட்டு மிரட்டிய குமார், முரளி, கவுரப்பன், பிரவீன் ஆகிய 4 பேரையும் பள்ளிகொண்டா காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான ஜீவாராம் தலைமறைவாக உள்ளதால், அவர் மீது பள்ளிகொண்டா காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் இந்த கும்பலிடமிருந்து சுமார் 20 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்கள் பறிமுதல் செய்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: குட்கா பதுக்கியவர் காவலர்களுடன் வாக்குவாதம்!