திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே ஏழைகளின் ஊட்டியாக விளங்கும் ஏலகிரி மலை தமிழ்நாட்டின் சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக உள்ளது. இந்தப் பகுதிக்கு நாள்தோறும் பல்வேறு பகுதிகளிலிருந்து சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு ஏலகிரி மலை அத்தனாவூர் பகுதியைச் சேர்ந்த கார் ஓட்டுநர் ஒருவர் சுற்றுலாப் பயணிகளை, திருப்பத்தூர் பகுதியில் இறக்கிவிட்டு, தனது வீட்டிற்குச் செல்வதற்காக நள்ளிரவு 12 மணியளவில் ஏலகிரி மலை இரண்டாவது வளைவில் வந்துகொண்டிருந்தார்.
அப்போது, ஆட்கள் நடமாட்டம் இல்லாத நேரத்தில் வெள்ளை நிறத்தில் உருவம் ஒன்று சாலையைக் கடந்து சாலையோரம் உள்ள தடுப்பு சுவரில் அமர்ந்ததாகவும் இதைப்பார்த்து, அதிர்ச்சியடைந்த ஓட்டுநர் உடனடியாக காரை நிறுத்திவிட்டு தனது செல்ஃபோன் மூலம் வீடியோ எடுத்ததாகவும் கூறப்படுகிறது.
பின்னர், சிறிது நேரம் கழித்து அந்த உருவம் மாயமாகியவுடன், ஓட்டுநர் காரை மெதுவாக இயக்கிக்கொண்டு வீட்டிற்குச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து, அவர் சக நண்பர்களிடம் தெரிவிக்கும்போது, அவர்களும் வெள்ளை நிற உருவத்தை அவ்வப்போது சாலையைக் கடந்து சென்றதைப் பார்த்ததாகத் தெரிவித்துள்ளனர்.
கடந்த சில மாதங்களாக ஏலகிரி மலை சாலையில் சுற்றுலாவிற்கு வருபவர்கள் சுற்றுலாவை முடித்துவிட்டு, தங்களது வீட்டிற்குச் திரும்பும்போது கார், இரு சக்கர வாகனங்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாகிவருகிறது. இந்த விபத்துகள் குறித்து ஏலகிரிமலை காவல் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை மேற்கொண்டதில் வாகன ஓட்டிகள் யாரும் மது அருந்தவில்லை என தெரியவந்தது.
மேலும், விபத்துக்குள்ளானவர்கள் கூறுகையில், ‘வாகனத்தில் வந்து கொண்டிருக்கும்போது திடீரென சுயநினைவிழந்து தடுப்பு சுவர் மீது மோதி விபத்து ஏற்படுகிறது’ என்று கூறியுள்ளனர். இதுபோன்று, கடந்த சில மாதங்களாக இருசக்கர வாகனம், கார் என 30க்கும் மேற்பட்ட வாகனங்கள் விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்துகளுக்கும், இரவு நேரத்தில் சுற்றித்திரியும் வெள்ளை நிற உருவத்திற்கும் சம்பந்தம் உள்ளது என வாகன ஓட்டிகளுக்கும் பொதுமக்களுக்கும் சந்தேகம் எழுந்துள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு திருமணமாகி மூன்று நாள்களே ஆன தம்பதிகள், இருசக்கர வாகனத்தில் ஏலகிரி மலைக்குச் சென்று பல்வேறு இடங்களை சுற்றிப் பார்த்துவிட்டு, வீடு திரும்புகையில் 9ஆவது வளைவின் தடுப்புச் சுவர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இளம்பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இவரது கணவர் படுகாயமடைந்துள்ளார்.
இந்த விபத்தில் உயிரிழந்த இளம்பெண் தான் ஆவியாக ஏலகிரி மலைப் பகுதிகளில் வலம் வருவதாக அப்பகுதி மக்களால் நம்பப்படுகிறது. இதனால் தான் மலைச்சாலையில் அடிக்கடி விபத்து ஏற்படுவதாகவும் இரவு நேரத்தில் மலைச் சாலையில் சுற்றித்திரியும் வெள்ளை நிற உருவம், அப்பெண்ணின் ஆவி தான் எனவும் அப்பகுதி மக்கள் நம்பி பீதியடைத்து வருகின்றனர்.
இதையும் படிங்க: பெண்களை சாட்டையால் அடித்து பேய் விரட்டும் திருவிழா! - ஒழியாத பிற்போக்கு பழக்கவழக்கங்கள்