வேலூர் காட்பாடியை அடுத்த லத்தேரியைச் சேர்ந்த மோகன், லத்தேரி பேருந்து நிலையம் அருகே பட்டாசு கடை நடத்தி வந்தார். இந்தக் கடையில் இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் கடை உரிமையாளர் மோகன் (62), அவரது பேரக்குழந்தைகள் தேஜஸ்(8), தனுஷ்(4) என மூன்று பேரும் உடல் கருகி உயிரிழந்தனர்.
தீ விபத்துக்கான காரணம் குறித்து சம்பவ இடத்தில் காட்பாடி டிஎஸ்பி ரவிச்சந்தீரன் நேரில் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டார். மேலும், வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் நேரில் சென்று பார்வையிட உள்ளார். இந்த விபத்தில் கடை முழுவதும் எரிந்து சேதமானதோடு, கடை அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 5 இருசக்கர வாகனங்களும் தீயில் கருகின.
தீ விபத்து ஏற்பட்டவுடன் முதலில் பொது மக்களே தண்ணீர் பீய்ச்சி தீயை அணைக்க முயற்சித்தனர். பின்னர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து அங்கு விரைந்த காட்பாடி தீயணைப்பு துறையினர், தீயணைப்பு வாகனம் மூலம் தீயை அணைத்தனர்.
முதற்கட்ட விசாரணையில், காலை கடையை திறக்கும் போது கடைக்கு திருஷ்டி கழிப்பதற்காக சூடம் ஏற்றியதும், அதன் மூலம் தீ பற்றி இருக்கலாம் என்றும் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து லத்தேரி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்விற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க:பட்டபகலில் மோட்டார் திருடிய இளைஞர்: காவலரிடம் ஒப்படைத்த பொதுமக்கள்