வேலூர்: குடியாத்தம் அருகே கடைக்கு புதிய மின் இணைப்பு பெறுவதற்கு விண்ணப்பித்தவரிடம் 4 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய வணிக ஆய்வாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குடியாத்தம் அடுத்த மேல்பட்டி கிராமத்தில் சிவா என்பவர் தனக்கு சொந்தமான கடைக்கு மின் இணைப்பு பெறுவதற்காக, மேல்பட்டி மின்சாரத்துறை அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார். இதனை மேல்பட்டி மின்வாரிய அலுவலகத்தில் பணிபுரியும் வணிக ஆய்வாளர் மதன் என்பவர், சிவா அளித்த மனுவின் அடிப்படையில் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார்.
இதையும் படிங்க: சென்னை சென்ட்ரலில் ஆண் குழந்தை கடத்தல்.. 3 மணி நேரத்தில் மீட்ட ரயில்வே போலீசார்..
பின்னர் கடைக்கு மின் இணைப்பு வழங்குவதற்காக, கடையின் உரிமையாளர் சிவாவிடம் மின்சார அலுவலகத்தில் பணிபுரியும் வணிக ஆய்வாளர் மதன் 4 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து கடையின் உரிமையாளர் சிவா வேலூரில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
அதன் அடிப்படையில், லஞ்ச ஒழிப்புத் துறையினர் சிவாவிடம் ரசாயனம் தடவிய நான்காயிரம் ரூபாய் நோட்டினை கொடுத்து அனுப்பி இருந்தனர். அந்தப் பணத்தை பெற்றுக் கொண்ட மதனை மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறையினர் கையும் களவுமாக பிடித்துள்ளனர்.
பின்னர் பல மணி நேரம் விசாரணை மேற்கொண்டு, மின்சார அலுவலகத்தில் வணிக ஆய்வாளராக பணிபுரிந்து வரும் மதன் என்பவரை கைது செய்தனர். மின்வாரிய ஊழியரை லஞ்ச ஒழிப்புத் துறையினர் கைது செய்த சம்பவம், அப்பகுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் என்ஜின் முகப்பில் தொங்கிய மனித உடல் - பயணிகள் அதிர்ச்சி..!