வேலூர்: மத்தியில் ஆட்சி செய்யும் பாஜக, தனது 9 ஆண்டுகால ஆட்சியின் சாதனைகளை நாட்டு மக்களிடம் விளக்குவதற்காக பல்வேறு நடவடிக்கையில் இறங்கியுள்ளது. இதன் ஒருபகுதியாக, ஆங்காங்கே பல்வேறு பகுதிகளில் பாஜக அரசின் 9 ஆண்டுகால ஆட்சியின் சாதனைகளை (9 years of Modi Govt) விளக்கும் விதமாக பொதுக்கூட்டங்களை நடத்தி வருகிறது. அந்த வகையில், தமிழ்நாட்டிலும் பாஜக இதற்கான பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது.
இந்த நிலையில், வேலூரில் இதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் பாஜக பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொள்கிறார். இதற்காக, இன்று (ஜூன்10) இரவு சென்னை (Amit Shah visits Tamil Nadu) வர உள்ளார். இதனைத்தொடர்ந்து, நாளை காலையில் சென்னை கோவிலம்பாக்கத்தில் நடைபெறும் பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் அவர் கலந்து கொள்கிறார். இதற்கு அடுத்தப்படியாக, வேலூரில் நடக்க உள்ள பாஜகவின் 9 ஆண்டு கால சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் அவர் பங்கேற்கிறார்.
ட்ரோன்கள் பறக்கத் தடை: முன்னதாக, அமித்ஷாவின் வருகையால் சென்னை முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். அதே நேரத்தில் வேலூரில் மாலை 3 மணி அளவில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க உள்ள நிலையில், அம்மாவட்ட போலீசார் தீவிர பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். அத்துடன் பாதுகாப்பு கருதி வேலூரில் ட்ரோன்கள், ராட்சத பலூன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, பொதுக்கூட்டம் நடைபெற உள்ள பள்ளிகொண்டா, கந்தனேரி பகுதி முழுவதும் ட்ரோன்கள், ராட்சத பலூன்கள் பறக்க தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தடையை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.மணிவண்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
1 கமாண்டோ தலைமையில் 25 CRPF வீரர்கள் பாதுகாப்பு: இதைத்தொடர்ந்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் வருகையையொட்டி, 25 CRPF வீரர்கள் 1 கமாண்டோ தலைமையில் 1200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், மோப்ப நாய் உதவிகளுடன் வெடிகுண்டு பரிசோதனை நிபுணர்கள் தீவிர பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா அடுத்த கந்தனேரி பகுதியில் நடக்கும் இந்த பொதுக்கூட்டத்தில், சிறப்பு அழைப்பாளராக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்துகொள்ள உள்ள நிலையில், மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் வி.கே.சிங் மற்றும் மத்திய தகவல் தொடர்புத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். இக்கூட்டத்திற்கு மாநில தலைவர் அண்ணாமலை தலைமை தாங்க உள்ளார். பாஜக மாநில துணைத்தலைவர் நரேந்திரன் தலைமையில் பாதுகாப்பு பணி பலப்படுத்தும் பணியில் காவல்துறையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கான முன்னேற்பாடு பாதுகாப்பு பணிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பொதுக்கூட்டம் நடைபெறும் இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர். மேலும், இக்கூட்டத்திற்கு 25 சிஆர்பிஎப் வீரர்கள் (CRPF) 1 கமண்டோ தலைமையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் நிலையில், தமிழ்நாடு காவல்துறை சார்பில் நான்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் தலைமையில்1200 காவலர்கள், பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஓபிஎஸ்சுக்கு நேரம் ஒதுக்குவாரா மத்திய அமைச்சர் அமித்ஷா?