வேலூர்: குடியாத்தத்தை அடுத்த அக்ராவரம் ஊராட்சி ரங்கசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மேகநாதன் (வயது 28). போர்வெல் மெக்கானிக்காக உள்ளார். இவர் தனது வீட்டுமனை பட்டாவிற்கு பெயர் மாற்றம் செய்ய அக்ராவரம் கிராம நிர்வாக அலுவலகத்தில் மனு செய்தார்.
இதனை பரிசீலித்து பெயர் மாற்றம் செய்து தருவதாக அவரிடம் கிராம நிர்வாக அலுவலரான கவசம்பட்டு கிராமத்தை சேர்ந்த ஜெயமுருகன் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து மேகநாதன் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்திற்கு பலமுறை சென்றும் பட்டா பெயர் மாற்றம் செய்து தரவில்லை.
இது குறித்து கேட்டபோது கிராம நிர்வாக அலுவலர் ஜெயமுருகன் மற்றும் உதவியாளரான பெரும்பாடி கிராமத்தை சேர்ந்த தேன்மொழி ஆகியோர் ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து லஞ்ச பணம் கொடுக்க விரும்பாத மேகநாதன் இது குறித்து வேலூர் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி சங்கர்ரிடம் புகார் அளித்தார்.
இதனையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை ஆலோசனையின் படி மேகநாதனிடம் ரசாயனம் பூசிய 500 ரூபாய் நோட்டுகள் 20 என மொத்தம் 10 ஆயிரம் ரூபாயை கிராம நிர்வாக அலுவலர் ஜெயமுருகன் மற்றும் கிராம நிர்வாக உதவியாளர் தேன்மொழி ஆகியோரிடம் மேகநாதன் வழங்கினார்.
அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ஜெயமுருகன் மற்றும் தேன்மொழி ஆகிய இருவரையும் கையும் களவுமாக கைது செய்தனர். இதனையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி இருவரையும் மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் பட்டா மாறுதலுக்கு 10 ஆயிரம் ரூபாய் லட்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் ஜெயமுருகனை பணியிடை நீக்கம் செய்து குடியாத்தம் உதவி கலெக்டர் வெங்கட்ராமன் உத்தரவிட்டுள்ளார். அதேபோல் அக்ராவரம் கிராம உதவியாளர் தேன்மொழியை பணியிடை நீக்கம் செய்து குடியாத்தம் தாசில்தார் சித்ராதேவி உத்தரவிட்டார்.
கைது செய்யப்பட்ட ஜெயமுருகன் சில மாதங்களுக்கு முன் தான் அக்ராவரம் கிராமத்திற்கு மாற்றம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. வீட்டுமனை பட்டா மாற்றுவதற்காக பத்தாயிரம் லஞ்சம் வாங்கி லஞ்ச ஒழிப்புத்துறையினால் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் உதவியாளர் கைது செய்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: உ.பியில் பாலியல் வன்கொடுமையால் பாதித்த பெண்ணிடம் ஆபாச கேள்வி.. காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட்!