ETV Bharat / state

விநாயகர் சதுர்த்தி: வேலூரில் விதவிதமாய் தயாராகும் விநாயகர் சிலைகள் - ஓர் சிறப்புப் பார்வை! - விநாயகர் சதுர்த்தி சிறப்பு

Ganesh Chaturthi: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வேலூரில் விதவிதமாய், சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் களிமண்ணால் தாயாராகும் விநாயகர் சிலைகள் குறித்து ஒரு சிறப்புத் தொகுப்பை காணலாம்.

Ganesh Chaturthi
விநாயகர் சதுர்த்தி
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 8, 2023, 10:55 AM IST

Updated : Sep 8, 2023, 3:39 PM IST

விநாயகர் சதுர்த்தி விழா

வேலூர்: வேலூர் மாவட்டத்தில் உள்ள அணைக்கட்டுப் பகுதியில் தயாராகும் மண்பாண்டப் பொருட்கள் உலகப்புகழ் பெற்றதாக கருதப்படுகிறது. மேலும் இங்கு தயாராகும் மண்பாண்ட பொருட்கள் தரம் மற்றும் உறுதிமிக்கது என்ற காரணத்தால், தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பகுதிகளிலும் இருந்து வேலூர் மண்ணில் செய்யப்பட்ட பொருட்களை ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர்.

விஷேச நாட்கள் மட்டுமின்றி ஆண்டு முழுவதும், இங்கு மண்பாண்டப் பொருட்கள் செய்யப்படுகிறது. அதாவது ஜனவரி முதல் டிசம்பர் வரை பொங்கல் பானை, அடுப்பு, அக்னி சட்டிகள், மண் பானை, கூஜா, பூந்தொட்டிகள், திருவிழாவிற்கு சாற்றப்படும் குதிரை மற்றும் சாமி சிலைகள், நவராத்திரி கொலு பொம்மைகள், தீப ஒளி விளக்குகள், அகல் விளக்குகள், கிளியான் சட்டிகள், நட்சத்திர ஓட்டலுக்கு தேவையான தந்தூரி அடுப்புகள் மற்றும் அலங்கார மண் விளக்குகள், கலைநயம் மிக்க மண்சிலைகள் உள்ளிட்டவை செய்யப்பபட்டு தமிழ்நாடு முழுவதும் பயன்பாட்டுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், வருகின்ற செப்டம்பர் 18 ஆம் தேதி விநாயகரின் பிறந்தநாளைக் கொண்டாடும் விதமாக நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி தின விழா கொண்டாடப்பட உள்ளது. விநாயகர் சதுர்த்திக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், விநாயகர் சிலைகள் செய்யும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இங்கு தயாராகும் சிலைகள் வேலூர் மாவட்டம் மட்டுமின்றி, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும், கேரளா கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கும் கொண்டு செல்லப்படுகிறது.

அதில், கற்பக விநாயகர், ஆனந்த விநாயகர், இலை விநாயகர் என வித விதமாக, வண்ணமயமான சிலைகளை செய்யும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். கடந்த 2 மாதங்களாக சுமார் 20க்கும் மேற்பட்ட வீடுகளில், விநாயகர் சிலைகள் தயார் செய்து வெளியூர்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றது. வேலூர் மாவட்டத்திலேயே இங்கு மட்டும் தான், தூய்மையான மண் மூலம் வித விதமாக சிலைகள் மிகப்பெரிய அளவில் தயார் செய்யப்படுகிறது.

அவ்வாறு தயாராகும் இந்த சிலைகள், விநாயகர் சதுர்த்திக்கு 3 நாட்கள் முன்பு அழகிய வடிவமைப்பு கொடுக்கப்பட்டு, வர்ணம் பூசி தத்ரூபமாக தயாராகி வேன்களில் கொண்டு செல்லப்படும். அதன் பின்னர் விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களுக்குச் செல்லும் இந்த விநாயகர் சிலைகள், விழாவின் இறுதிநாளில் கடல், ஆறு உள்ளிட்ட நீர்நிலைகளில் கரைக்கப்படுவது வழக்கம்.

இதுகுறித்து விநாயகர் சிலைகள் தயார் செய்யும் ஹரி என்பவர் கூறுகையில், "பல ஆண்டுகளாக விநாயகர் சதுர்த்தி தினத்தில், வீட்டில் விநாயகர் சிலை வைத்து வழிபாடு செய்து, பின்னர் நீர்நிலைகளில் கரைத்து விநாயகர் சதுர்த்தி விரதத்தை நிறைவு செய்வார்கள். இதற்காக ஆண்டு தோறும் விநாயகர் சதுர்த்தியில் புதிய விநாயகர் சிலைகளை பொதுமக்கள் வாங்கி வழிபடுவதால் ஏராளமான மண்பாண்ட தொழிலாளர்கள் வாழ்வு வளம் பெறுகிறது.

இந்த ஆண்டு பல ஊர்களில் இருந்து ஆர்டர்கள் அதிக எண்ணிக்கையில் கிடைத்துள்ளது. மேலும் வெளியூர்களுக்கு அனுப்பும் பணிகளிலும் ஈடுபட்டு வருகிறோம். இங்கு ரூ.200 முதல் ரூ.3000 வரையில் விநாயகர் சிறிய சிலைகள் கிடைக்கிறது. உற்பத்தி விலைக்கு வழங்குவதால் வியாபாரிகள் நேரடியாக இங்கு வந்து, அதிக அளவில் விநாயகர் சிலைகளை வாங்கி செல்கின்றனர்" என தெரிவித்தார்.

இந்நிலையில், எளிதில் கரையக்கூடிய மற்றும் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத களிமண்ணால் ஆன விநாயகர் சிலையை வாங்கி பயன்படுத்த பொதுமக்களுக்கு, அரசு பரிந்துரை செய்தால், தங்களுக்கு உதவிகரமாக இருக்கும் என்றும் சிலை சிற்பிகள் கூறுகின்றனர்.

மேலும் இத்தொழிலில் ஈடுபட்டுள்ள கலைஞர்களுக்கு மத்திய அரசு பிரதம மந்திரி சுய வேலைவாய்ப்பு திட்டத்தில் 35 சதவீத மானியத்தில் 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வரை நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. மத்திய அரசால் வழங்கப்பட்டு வரும் இந்த நிதியால், விநாயகர் சிலைகள் செய்யும் தொழிலாளர்களுக்கு மிகப்பெரிய உதவியாக இருப்பதாக, இந்த திட்டத்தில் பயன் அடைந்துள்ள விநாயகர் சிலைகளை செய்யும் கலைஞர்கள் தெரிவித்தனர்.

அதைத் தொடர்ந்து, மண்பாண்ட உற்பத்தியாளர் விஜய் கூறுகையில், "கைவினைத் தொழிலாளர்கள் செய்யும் தொழில்கள் அந்தந்த காலத்திற்கேற்ப பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர். குறிப்பாக மண்பாண்ட தொழிலாளர்கள் பொங்கல் நாட்களில் பானை சம்பந்தமான பொருட்கள். தீப நாட்களில் அகல் விளக்கு, விநாயகர் சதுர்த்தி விழா காலங்களில் விநாயகர் சிலைகள் பல்வேறு வடிவங்களில் தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர்.

தற்போது இந்த பொருட்களில் முறையாக வங்கி கடன் பெறுவதில் பல சிக்கல் ஏற்படுகிறது. இருந்த போதிலும், பிரதம மந்திரி சுய வேலைவாய்ப்பு திட்டத்தில் 1 லட்சத்து 50 ஆயிரம் வரை 35% மானியத்தில் மண்பாண்ட தொழிலாளர்களுக்கு வங்கிக் கடன் வழங்கப்பட்டு வருகிறது. அந்த நிதியினை பெற்று மண்பாண்ட தொழிலாளர்கள் பருவத்திற்கு ஏற்றார் போல், களிமண் உள்ளிட்ட மூலப் பொருட்களை வாங்கி தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர்.

தற்போது விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ள நிலையில், பல்வேறு உயரங்களில் விநாயகர் சிலைகள் செய்யப்பட்டு வருகிறது. முழுக்க முழுக்க களிமண்ணால் செய்யப்படுவதால், வேலூர் மாவட்டத்தில் மட்டுமல்லாமல் பிற மாவட்டங்களில் இருந்தும் வருகை தந்து விநாயகர் சிலைகளை வாங்கிச் செல்கின்றனர். குறிப்பாக அணைக்கட்டு பகுதியில் தரமான ஏரி மண் எடுத்து விநாயகர் சிலைகள் செய்யப்படுகிறது" எனவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஆத்தூர் வெற்றிலைக்கு புவிசார் குறியீடு... "விரைவில் தூத்துக்குடி மக்ரூன், விளாத்திகுளம் குண்டு மிளகாய்க்கும் கிடைக்கும்" - கனிமொழி!

Last Updated : Sep 8, 2023, 3:39 PM IST

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.