வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை அக்ராகாரம் பகுதியைச் சேர்ந்தவர் குணசேகர்(61). இவர் கலைஞர் பாதை என்ற மாத இதழை நடத்தி வருகிறார். குணசேகரின் முகநூல் பக்கத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் குறித்து அவதுறாக பதிவிட்டும், கேலி சித்திரங்களை பதிவிட்டும் வந்ததாக கூறப்படுகிறது.
இதற்கிடையே தனது கட்சியையும், தலைவரையும் அவமதிக்கும் விதத்தில் பதிவிட்ட குணசேகர் மீது நடவடிக்கை எடுக்க கோரி ராணிப்பேட்டையை சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். திரும்பி வரும் வழியில் குணசேகருக்கும் விசிக கட்சியினருக்குமிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அப்போது விசிக கட்சியினர் குணசேகரனை கீழே தள்ளி சரமாரியாக அடித்து சட்டையை கிழித்துள்ளனர். இதில் நிலைகுலைந்த குணசேகர் தன்னை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதையடுத்து 2 தரப்பினர் புகார் மீதும் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தனது தலைவரைப் பற்றி தவறாக சித்தரிப்பதாகக்கூறி வயது வித்தியாசம் பார்க்காமல் முதியவரை பொது இடத்தில் வைத்து விசிக கட்சியினர் தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: முறைப் பெண்ணை காதலித்த இளைஞரின் காரை அடித்து நொறுக்கிய உறவினர்கள்!