வேலூா் மாவட்டம் சோளிங்கபுரம் ரயில் நிலையம் பகுதியில் தெலங்கானா மாநிலம் நலகொண்டா மாவட்டத்தைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட ஒப்பந்தத் தொழிலாளா்கள் குடும்பத்துடன் தங்கி ரயில் தண்டவாளத்தில் ஜல்லிகற்களை நிரப்பும் பணியில் ஈடுபட்டுவருகின்றனர். வழக்கம்போல் நேற்றிரவு பணிமுடிந்து ரயில் நிலைய வளாகத்தில் தூங்கிக் கொண்டிருந்தனர்.
அப்போது, அங்குவந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தூங்கிக்கொண்டிருந்த தொழிலாளி துா்காபிரசாத் (22) என்பவரின் மனைவி பார்வதி அருகில் படுத்திருந்த ஐந்து மாதக் குழந்தையை யாருக்கும் தெரியாமல் தூக்கியுள்ளார். அப்போது குழந்தை கத்தியதால், பெற்றோர் எழுந்து என்வென்று பார்பதற்குள் அந்த நபர் தப்பி ஓடியதாகக் கூறப்படுகிறது.
தப்பியோடிய அந்த நபர் முள் புதருக்குள் மறைந்திருப்பதைக் கண்ட தொழிலாளர்கள் அவரை துரத்திப் பிடித்து சோளிங்கபுரம் ரயில் நிலையத்தில் உள்ள கம்பத்தில் கட்டிவைத்து தாக்கினர்.
இந்நிலையில், தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே காவல் துறையினர், குழந்தையை கடத்த முயன்ற நபரை கைது செய்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில், குழந்தையை கடத்த முயன்ற இளைஞர் பெயர் தினேஷ் (29) என்றும் வாலாஜாபேட்டை அருகே உள்ள அணைக்கட்டு இலங்கை அகதிகள் முகாமில் வசித்துவருபவர் என்றும் தெரியவந்தது.