வேலூர்: காட்பாடி அருகே உள்ள தலையாரம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சௌந்தர்யா (17). நீட் தேர்வில் மதிப்பெண் குறைவாகப் பெற்று விடுவோமோ என்ற அச்சத்தில் நேற்று (செப்.15) காலை தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.
மாணவியின் உடல், உடற்கூராய்வுக்கு பிறகு மாலை 5.30 மணி அளவில் வீட்டிற்கு எடுத்து வரப்பட்டது. இதனை தொடர்ந்து கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி நேரில் சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், "முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போதிலிருந்தே நீட் தேர்வினை கடினமாக எதிர்த்து வந்தார். இந்தியாவில் எந்த தலைவருமே எதிர்காத அளவிற்கு அவர் இந்த நீட் தேர்வினை எதிர்த்து வருகிறார்.
தற்போதுகூட அமைச்சரவையில் நீட் தேர்வுக்கு எதிராக மசோதா தாக்கல் செய்துள்ளார். இரண்டு, மூன்று நாட்களில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். மாணவர்கள் இது போன்ற தற்கொலை முடிவை எடுக்கக் கூடாது. சௌந்தர்யா உயிரிழப்புக்கு முதலமைச்சர் நிவாரணம் அறிவிப்பார்" என்றார்.
இதையும் படிங்க: நாமும் நமது உறுதியற்ற நிலைப்பாடுகளுமே மாணவர்கள் மரணங்களுக்கு காரணம் - பா. ரஞ்சித்