வேலூர்: நாடாளுமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இந்த மக்களவைத் தேர்தலுக்காக பாஜகவினர் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக மத்திய அரசின் 9 ஆண்டு கால சாதனைகளை விளக்கி நாடு முழுவதும் பொதுக் கூட்டங்களை நடத்தி வருகின்றனர்.
தமிழ்நாட்டிலும் பல்வேறு மாவட்டங்களில் மத்திய அரசின் சாதனைகளை விளக்கி பொதுக் கூட்டங்கள் நடத்தப்பட உள்ளன. அதன்படி, வேலூரில் மத்திய அரசின் சாதனை விளக்கப் பொதுக் கூட்டம் வரும் 8ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொள்ள இருக்கிறார். அமித்ஷா வேலூருக்கு வருகை தர இருப்பது மாவட்ட பாஜகவினர் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், சாதனை விளக்கப் பொதுக் கூட்டம் நடத்தப்படும் இடத்தை தேர்வு செய்வது, நிகழ்ச்சிக்கான முன்னேற்பாடுகள் மேற்கொள்வது தொடர்பாக பாஜக மாநில பொதுச் செயலாளர் கார்த்தியாயினி தலைமையில் இன்று(ஜூன் 4) ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், பாஜக மாநில துணைத் தலைவர் நரேந்திரன், மாவட்டத் தலைவர் மனோகரன் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டு ஆலோசனை நடத்தினர். இதில், அமித்ஷா பங்கேற்க உள்ள பொதுக் கூட்ட மேடையை கந்தனேரி பகுதியில் அமைக்க முடிவு செய்யப்பட்டிருப்பதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, பிரம்மாண்ட பொதுக் கூட்ட மேடை அமைப்பது மற்றும் வரவேற்பு உள்ளிட்ட முன்னேற்பாடுகளில் பாஜக நிர்வாகிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
முன்னதாக சென்னையில் கடந்த மே 29ஆம் தேதி, மத்திய பாஜக அரசின் ஒன்பது ஆண்டு கால ஆட்சி குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், "பிரதமர் மோடியின் 9 ஆண்டு கால ஆட்சி நிறைவடைந்து 10வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறோம். 9 ஆண்டு கால ஆட்சியில் மக்களுக்கு நல்லாட்சி கொடுத்ததை போல், 10வது ஆண்டிலும் கொடுப்போம். 30 ஆண்டுகளாக இந்தியா முன்னேறாமல் இருந்த நிலையில், 2014-க்கு பின் முன்னேறி இருக்கிறது. கரோனாவை சரியாக கையாண்ட நாடு இந்தியாதான். 220 கோடி தடுப்பூசி மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது.
கரோனா காலத்தில் அடித்தட்டு மக்களுக்கு உணவு கொடுத்து ஊக்கம் அளித்துள்ளோம். பிரதமர் மோடி 2014-க்கு பிறகு 3.50 கோடி மக்களுக்கு வீடு கட்டி கொடுத்திருக்கிறார். 1947ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரை ஆறரை கோடி கழிப்பறைகள்தான் கட்டி இருந்தார்கள். ஆனால், அதன் பின் வந்த மோடி ஆட்சியில், 11 கோடியே 70 லட்சம் கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. இந்தியாவில் முதல் முறையாக பெண்களுக்கு 1 ரூபாய்க்கு சானிட்டரி நேப்கின் கொடுக்கப்பட்டுள்ளது. 12 கோடி வீடுகளுக்கு பைப் மூலம் குடிநீர் விநியோகிக்கபடுகிறது. இந்தியாவில் சமூக நீதி உள்ள மனிதர் மோடிதான் என்று சொல்லலாம்" என்று கூறினார்.
இதையும் படிங்க: "அமெரிக்காவுன் தான் போட்டியே" - 9 ஆண்டு மோடி ஆட்சி குறித்து அண்ணாமலை கருத்து