தமிழ்நாட்டில் அதிக பரப்பளவு கொண்ட பெரிய மாவட்டங்களை பிரிக்கும் பணிகளில் தமிழ்நாடு அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது. அந்த வகையில் வேலூர் மாவட்டத்தைப் பிரித்து வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் தாலுகாக்களை தலைமையிடமாகக் கொண்டு தனித்தனி மாவட்டங்களாக மூன்று மாவட்டங்கள் உருவாக்கப்படும் என்று கடந்த 15ஆம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
இதற்கு பொதுமக்கள் பெரும்பாலனோர் வரவேற்பு தெரிவித்துள்ளனர். ஆனால் அரக்கோணத்தில் வசிக்கும் பொதுமக்கள் தங்கள் பகுதியைத் தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டம் உருவாக்கப்படும் என்று எதிர்பார்த்த நிலையில் ராணிப்பேட்டை தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டது அவர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியதாகத் தெரிகிறது.
இந்நிலையில், அரக்கோணத்தை தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டம் அமைக்கக்கோரி, அரக்கோணத்தில் வியாபாரிகள் சங்கம், ஆட்டோ ஓட்டுனர்கள் சங்கம் இணைந்து முழு அடைப்பு போராட்டத்தை நடத்தினர். இதன் காரணமாக ஆட்டோக்கள் இயங்காததால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.
அதில் அரக்கோணத்தில் இருந்து வேலூர் செல்வதற்கு 80 கிலோமீட்டர் தூரமும், ராணிப்பேட்டை செல்வதற்கு 60 கிலோமீட்டர் தூரமும் செல்ல வேண்டியுள்ளது. எனவே, அரக்கோணத்தைத் தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டம் அறிவிக்க வேண்டும் அல்லது அரக்கோணம் அருகிலுள்ள திருவள்ளூர் அல்லது காஞ்சிபுரம் மாவட்டத்துடன் இணைக்க வேண்டும் என்பது அவர்களின் முக்கிய கோரிக்கையாக இருக்கிறது.
மேலும் வேலூர் மாவட்டம் பிரிக்கப்படுவது தொடர்பாக வரும் 29, 30ஆம் தேதிகளில் மாவட்ட ஆட்சியர், வருவாய் நிர்வாக ஆணையர் தலைமையில் கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெற உள்ளது. இந்நிலையில் அரக்கோணத்தைத் தனி மாவட்டமாக அறிவிக்கக் கோரி, முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.