வேலூர் மாவட்டம் தேவலாபுரம் அருகே உள்ள பாலாற்றங்கரையோரம் சனிக்கிழமை மாலை இறுதி ஊர்வலம் நடந்து கொண்டிருந்தது. அப்போது சிலர் பட்டாசு வெடித்ததில், எதிர்பாராத விதமாக அங்கிருந்த சின்னசாமி என்பவரின் குடிசை வீட்டின் மீது தீ பற்றி எரிந்தது. உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தீயணைப்புத்துறையினர் வர தாமதமானதால் அப்பகுதியில் இருந்த அக்கம்பக்கத்தினர், குடிசை வீட்டில் எரிந்த தீயை போராடி அணைத்தனர்.
இந்த விபத்தில் வீட்டிலிருந்த 13 ஆயிரம் ரூபாய் பணமும், 8 சவரன் நகையும் தீயில் எரிந்து நாசமாகின. மேலும், இது குறித்து சம்பந்தப்பட்டவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுத்து சேதமடைந்த பொருட்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் காவல்துறையினரிடம் கோரிக்கை வைத்தனர்.