வேலூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் வருகின்ற ஆகஸ்ட் 5ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதில் திமுக சார்பாக கதிர் ஆனந்த், அதிமுக சார்பாக அக்கட்சியுடன் கூட்டணி வைத்துள்ள புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர்.
தேர்தல் தேதி நெருங்கி வரும் நிலையில், ஒவ்வொரு கட்சியும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.
அந்த வகையில், அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி. சண்முகத்துக்கு ஆதரவாக துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், ஜூலை 29, 30, ஆகஸ்ட் 1 ஆகிய தேதிகளில் வேலூர் தொகுதி முழுவதும் தீவிர பரப்புரை மேற்கொள்ள இருக்கிறார்.

அதற்கான சுற்றுப்பயண விவரத்தை அதிமுக தலைமை இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி, ஜூலை 29ஆம் தேதி மாலை 4 மணிக்கு ஒடுகத்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளிலும், மாலை 6 மணிக்கு லத்தேரி பகுதியிலும், 30ஆம் தேதி மாலை 4 மணியளவில் குடியாத்தம் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட பேரணாம்பட்டு பகுதியிலும், மாலை 6 மணியளவில் வேலூரிலும் பரப்புரையை மேற்கொள்ள இருக்கிறார்.
மேலும், ஆகஸ்ட் 1ஆம் தேதியன்று மாலை 4 மணியளவில் ஆலங்காயம் பகுதியிலும், மாலை 6 மணியளவில் ஆம்பூரிலும் ஏ.சி.சண்முகத்துக்கு ஆதரவாக அவர் பரப்புரை செய்ய இருக்கிறார்.