வேலூர்: வேலூர் மாவட்டத்தில் கூலித்தொழிலாளியின் 14 வயது மகள் நேற்றிரவு (மார்ச் 02) வயிறு வலிப்பதாக தாயிடம் கூறியிருக்கிறார். இதனை அடுத்து அருகிலுள்ள அணைக்கட்டு அரசு மருத்துவமனைக்கு சிறுமியை அவரது பெற்றோர் அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள், பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனை அனுப்பி வைத்தனர். தொடர்ந்து அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள், சிறுமி நான்கு மாத கர்ப்பமாக இருப்பதாக கூறினர்.
இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், இது குறித்து காவல் துறையினரிடம் புகார் அளித்தனர். பின்னர், புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த பள்ளிகொண்டா காவல் துறையினர் மருத்துவமனைக்குச் சென்று விசாரணையைத் தொடங்கினர். முதற்கட்டமாக சிறுமியுடன் பள்ளியில் பயின்று வரும் சக மாணவர் ஒருவர் நட்பாகப் பழகி வந்தது தெரியவந்தது. அவனை அழைத்து காவல் துறையினர் விசாரணை செய்தபோது மாணவி இவன் இல்லை எனத் தெரிவித்தார்.
இதனையடுத்து சிறுமியிடம் காவல் துறையினர் தொடர்ந்து நடத்திய விசாரணையில், உறவினர் ஒருவரே அந்த சிறுமிக்கு பல முறை பாலியல் வன்புணர்வு செய்தது தெரியவந்தது. சிறுமிக்கு ஆடம்பரப் பொருட்களை வாங்கி கொடுத்தும், சிறுமியிடம் ஆசை வார்த்தைகளை கூறியும், தினமும் வீட்டில் ஆள் இல்லாத போது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்தது தெரியவந்தது. கடந்த ஒரு வருடமாக சிறுமியை வன்புணர்வு செய்து சிறுமியை கர்ப்பம் ஆக்கியதும் காவல் துறையினர் விசாரணையில் தெரியவந்தது.
சிறுமியிடம் பாலியல் வன்புணர்வு செய்ததை வெளியே கூறினால் கொலை செய்து விடுவதாக மிரட்டி பலமுறை பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டது தெரியவந்தது. தொடர்ந்து அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், வேலூர் மத்திய சிறைச்சாலையில் அடைத்தனர். இதனிடையே பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: 4 மாத குழந்தையைக் கொன்று புதைத்த கொடூரத் தந்தை - பகீர் பின்னணி