வேலூர்: பெருமுகை மேலாண்டை தெருவைச் சேர்ந்தவர் பாலமுருகன் (20). அக்டோபர் 27ம் தேதி வேலைக்குச் சென்ற இவர் வீடு திரும்பவில்லை. பாலமுருகனின் தாய் பேபி சத்துவாச்சாரி காவல் நிலையத்தில் தனது மகன் காணாமல் போனதாக புகார் அளித்தார். அதன் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் பாலமுருகனை தேடிவந்தனர்.
கடந்த ஆண்டு தோட்டப்பாளையத்தில் சுகுமார் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் பாலமுருகனும் குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்தார். இதனால் சந்தேகத்தின் அடிப்படையில் தோட்டப்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஜெகதீஷன் (19), மதிவாணன் (18) மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய மூன்று பேரையும் பிடித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், சுகுமாரின் கொலைக்கு பழி வாங்கவே பாலமுருகனை கொலை செய்துவிட்டு புதர்களுக்கு மத்தியில் குழி தோண்டி புதைத்ததாக மூவரும் கூறியுள்ளனர். இதனைத்தொடர்ந்து அவர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.
மேலும் பாலமுருகன் புதைக்கப்பட்ட இடத்திலிருந்து சடலத்தை மீட்ட காவல்துறையினர், உடற்கூராய்விற்கு பின் உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.
இதையும் படிங்க: திருமணத்தைத் தாண்டிய உறவு - ராமநாதபுரத்தில் பெண் கொலை