கரோனா தொற்று காரணமாக வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் வேலூர் - அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தனர். இவர்களில் ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 15 பேர், திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த 5 பேர் என மொத்தம் 20 பேர் இன்று (ஏப்.21) குணமாகி 108 ஆம்புலென்ஸ் மூலம் அவரவர் வீட்டுக்கு அழைத்துச்செல்லப்பட்டனர்.
முன்னதாக இவர்களை வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முதல்வர் செல்வி, மருத்துவர்கள், செவிலியர்கள் ஆகியோர் கை தட்டி வாழ்த்து தெரிவித்து, பழங்களை வழங்கி வழி அனுப்பிவைத்தனர்.
இவர்கள் அனைவரும் வீடுகளில் 14 நாட்கள் தனிமையில் இருக்க அறிவுறுத்தப்பட்டது. முன்னதாக குணமாகி செல்லும் 20 பேரும் தங்கள் வீடுகளில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
கரோனா தொற்றில் இருந்து மீண்டவர்கள் மருத்துவர்களுக்கும், செவிலியர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்தனர். வீடு திரும்பிய அவர்களை ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர்கள் வரவேற்று வாழ்த்தினர்.
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் இதுவரை கரோனா தொற்றுக்கு ஆளாகி இதுவரை 24 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். மீதம் உள்ளவர்கள் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, சிஎம்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.