திருச்சி: கடந்த 2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16ஆம் தேதி, திருச்சியைச்ஹ் சேர்ந்த பசுபதி (27), வரதராஜ் ( 29) மற்றும் திருப்பதி (29) ஆகியோர் சேர்ந்து, வீட்டில் தனியாக இருந்த சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர். அது குறித்து அளித்த புகாரின் அடிப்படையில், அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, 3 பேரையும் கைது செய்தனர்.
அதனை அடுத்து, அந்த வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிகை, கடந்த 2020ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 9ஆம் தேதி திருச்சி மகளிர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஸ்ரீவத்சன், நேற்று (ஜன.11) போக்சோ சட்டப்படி கைது செய்யப்பட்ட 3 பேருக்கும் 20 ஆண்டு சிறை தண்டனையும், தலா 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.
மேலும், 2 சட்டப் பிரிவுகளில், 6 ஆண்டு சிறை தண்டனையும், 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து, தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதி, பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசுத் தரப்பில் 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பு அளித்தார்.
இதையும் படிங்க: தூத்துக்குடியில் கொடூரம்.. 7 வயது சிறுவன் கத்தியால் குத்தி கொலை - நடந்தது என்ன?
இந்நிலையில், சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த வழக்கில் தண்டனை பெற்ற பசுபதி, திருப்பதி ஆகிய இருவரும் மகிளா நீதிமன்ற கட்டடத்தில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதில் இருவருக்கும் காலில் முறிவு ஏற்பட்டுள்ளது. பின்னர், இருவரையும் உடனடியாக மீட்டு, சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், நீதிபதி தண்டனையை அறிவித்துக் கொண்டிருக்கும் பொழுது, குற்றம் சாட்டப்பட்ட இருவர், நீதிமன்றத்தில் தற்கொலை செய்து கொள்ள முயன்ற சம்பவம், திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: தனியார் விடுதியில் சடலமாக மீட்கப்பட்ட தன்பாலின காதலர்கள்.. போலீசார் தீவிர விசாரணை!