திருச்சி: சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தினமும் சில இளைஞர்கள் ரேஸ் பைக்கில் சாகசம் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் அப்படி பைக் சாகசம் செய்த வீடியோவினை சில இளைஞர்கள் தங்களது சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.
இந்த வீடியோவில் விலையுயர்ந்த பைக்கை ஓட்டும் அந்த இளைஞர் ஒருவர் தாறுமாறான வேகத்தில் செல்வதுடன், தன்னுடன் மேலும் 2 இளைஞர்களை முன்னும் பின்னுமாக உட்கார வைத்துக்கொண்டு முன் வீலை தூக்கிக்கொண்டு, ஒற்றை வீலில் பைக்கை ஓட்டுகிறார்.
மக்கள் நடமாட்டம் உள்ள மற்றும் வாகனங்கள் அதிக அளவு செல்லும் பகுதியில், இந்த சாகசத்தில் ஈடுபட்டுள்ளனர். அது மட்டும் இல்லாமல் வண்டியில் செல்லும் இளைஞர்கள் தலையில் ஹெல்மெட் அணியாமல் ஆபத்தான பயணத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சாகச நிகழ்ச்சி ஒருநாள் இரண்டு நாள் மட்டுமல்ல தினமும் நடக்கிறது.
இதனால் இந்த பகுதியில் மக்கள் நடமாடவே அஞ்சுகிறார்கள். இவர்கள் சாகசம் செய்யும் போது எதிர்பாராதவிதமாக விபத்து ஏற்பட்டு விட்டால் போக்குவரத்து நிறைந்த சாலைகளில் இதுபோல அஜாக்ரதையாகவும், விபத்து ஏற்படும் வண்ணம் வண்டி ஓட்டினாலும் சென்னையில் கடும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. நூதன தண்டனையும் வழங்கப்படுகிறது.
ஆனால் திருச்சி மாநகரத்தை பொறுத்தவரை இதை யாரும் கண்டுகொள்வதில்லை. இதை இப்படியே விட்டு விட்டால் இன்னும் பலர் இப்படி கிளம்பி விடுவார்கள். எனவே பொது நலன் கருதி இவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே திருச்சி பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: லாரி மோதி நூலிழையில் உயிர் தப்பிய சிறுவன்.. பதைபதைக்கும் சிசிடிவி!