திருச்சி : திருச்சியில் நடைபெற்ற அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் கட்சி நிர்வாகியின் இல்ல திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக வருகை தந்த அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டி அளித்தார்.
அப்போது பேசிய அவர், ''பதவி வெறி மற்றும் ஒரு சிலரின் சுயநலத்தால் ஜெயலலிதாவின் இயக்கம் தொடர்ந்து பலவீனம் ஆகிக்கொண்டிருக்கிறது. அதை மீண்டும் உண்மையான ஜெயலலிதா தொண்டர்கள் ஒன்றிணைந்து மீட்டெடுக்க வேண்டும்.
அதைத் தொடர்ந்து மாணவர்கள் தேர்வு எழுதுவது குறைந்து வரும் நிலையில் இது குறித்த கேள்விக்குப் பதிலளித்த தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பெரும்பாலான மாணவர்கள் ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் உள்ளிட்ட தொழில்நுட்பப் படிப்பை தேர்ந்தெடுத்துவிட்டார்கள் என்றார். அது உண்மையானால், அதற்கான புள்ளி விவரம் மற்றும் ஆதாரங்களோடு மக்கள் மத்தியில் விளக்கம் அளிக்க வேண்டும். அதுவே, அமைச்சரின் கடமை. அதற்கான நடவடிக்கைகளை அவர் மேற்கொள்வார் என நம்புகிறேன்'' என்று தெரிவித்தார்.
அதிமுகவில் ஒரு லட்சம் எடப்பாடி பழனிசாமி இருக்கிறார்கள் என கூறுகிறார்கள். இது குறித்து உங்களுடைய கருத்து என்ன என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, ''அதிமுகவில் ஒரு லட்சம் துரோகிகள் உள்ளனர் என்பதை அவர்களே ஒப்புக்கொண்டுள்ளனர். அது சரியான ஒன்று தான்'' எனத் தெரிவித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து அமமுகவில் இருந்து ஒரு சிலர் மற்ற அணிக்குச் செல்கிறார்கள் என்று கேட்கப்பட்ட கேள்விக்கு விளக்கமளித்த டிடிவி தினகரன், ''ஒரு சிலர் பதவியில் இருந்து இறக்கப்பட்டாலோ அல்லது அவர்களின் தனிப்பட்ட பிரச்னைக்காகவோ கட்சியிலிருந்து விலகி செல்கிறார்கள். அவர்களுக்குப் பிறகு தகுதியானவர்களைத் தேர்வு செய்து, அவர்களுக்கு கட்சியில் பொறுப்புகள் வழங்கப்பட்டு வருகின்றது'' என்றார்.
இதன் தொடர்ச்சியாக ராகுல் காந்தியின் நீக்கம் பற்றிய உங்கள் கருத்து என கேட்டபோது, ''2011ஆம் ஆண்டு மன்மோகன் சிங் ஆட்சியில் இது போன்ற அரசியல் ரீதியாக பழிவாங்குதல் நடக்க இருப்பதாக தகவல் வந்ததன் அடிப்படையில் சட்டத்திருத்தம் கொண்டு வர அப்போது முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அதாவது ஒருவர் பதவியில் இருக்கும்போது அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டால், மேல் முறையீடு செய்து தீர்ப்பு வரும் வரை அவர் அந்தப் பதவியில் இருக்கலாம் என்னும் சட்டத்தை அன்றைய நிலையில் ராகுல் காந்தி தான் ஏற்றுக் கொள்ளவில்லை.
அவர்கள் கொண்டு வந்த இந்த சட்டம் அவர்களையே பாதித்திருக்கிறது. சட்டப்படியான நடவடிக்கைகளின்படியே தேர்தல் ஆணையம் பதிவு நீக்கம் செய்துள்ளது. இதைப் பற்றி நான் கூற முடியாது’’ எனத் தெரிவித்தார். பேட்டியின் போது திருச்சி மாவட்ட செயலாளர் மனோகரன் மற்றும் நிர்வாகி ராஜசேகர் உட்பட பல முக்கிய நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
இதையும் படிங்க:நெல்லுக்கு களையெடுப்பது போல் அதிமுகவில் களையெடுப்பு - எடப்பாடி பழனிச்சாமி அதிரடி