அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று திருச்சி சங்கம் ஹோட்டலில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், ”புகழேந்தி பேசியதை திட்டமிட்டு வீடியோ எடுத்து வெளியிடவில்லை. நடப்பவற்றையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கிறேன். இது குறித்து விசாரித்து யார் மீது தவறு இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்.
அமமுக நிர்வாகிகள் சுயநலம், சொந்த விருப்பத்தின் காரணமாக வேறு கட்சிகளுக்குச் செல்கின்றனர். இதை துரோகம் என்று சொல்லமாட்டேன். அதிலும் அதிமுகவுக்கு செல்லாமல் திமுகவுக்கு செல்வது அவரவர் விருப்பம். ஏற்கனவே எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் அனைத்தும் விசாரித்து எடுக்கப்பட்டவைதான்.
தங்க தமிழ்ச்செல்வன் பேசிய ஆடியோவை என்னிடம் சொன்னால் நான் வெளியிட வேண்டாம் என்று சொல்லி இருப்பேன். அதனால் எங்கள் கட்சியைச் சேர்ந்த செல்லபாண்டியன் என்னிடம் சொல்லாமலேயே வெளியிட்டுவிட்டார். இதுபோன்ற ஆடியோ, வீடியோ வௌியிடுவதற்கு தலைமைதான் காரணம் என்று எப்படி சொல்ல முடியும்” என்றார்.