திருச்சி: தென்னூர் புதுமாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் அண்ணாதுரை. இவரது மகன் பிரபாகரன் (23) கூலித்தொழிலாளி. இவர் 2016ஆம் ஆண்டு ஜூலை மாதம் தென்னூரில் உள்ள டாஸ்மாக் பாரில் நண்பர்களுடன் மது அருந்தினார்.
அப்போது அதே பகுதியைச் சேர்ந்த ராஜா (27), இவரது நண்பர்கள் பாண்டியராஜன் (21), தினேஷ்குமார் (21) ஆகிய மூன்று பேரும் வந்தனர். இதில் ராஜா பிரபாகரனிடம் மது வாங்கித் தருமாறு கேட்டுள்ளார். அப்போது பணம் இல்லை என பிரபாகரன் கூறியதால் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இளைஞரைக் கொன்ற நண்பர்கள்
இதில் ஆத்திரமடைந்த பிரபாகரன், ராஜாவை சரமாரியாகத் தாக்கினார். இதில் இருவருக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டது. 2016 ஆகஸ்ட் 7ஆம் தேதி தென்னூர் பகுதியில் ராஜா அவரது நண்பர்கள் பாண்டியராஜன், தினேஷ்குமார் ஆகியோர் மது அருந்திக்கொண்டிருந்தனர்.
அப்போது அவ்வழியாக வந்த பிரபாகரனிடம் மூன்று பேரும் தகராறு செய்துள்ளனர். இதில் ஆத்திரமடைந்த ராஜா தான் மறைத்துவைத்திருந்த அரிவாளால் பிரபாகரனை சரமாரியாக வெட்டினார். அவரைத் தொடர்ந்து பாண்டியராஜனும், தினேஷ்குமாரும் வெட்டினர். இதில் சம்பவ இடத்திலேயே பிரபாகரன் உயிரிழந்தார்.
இது குறித்து, தில்லைநகர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து ராஜா, பாண்டியராஜன், தினேஷ்குமார் ஆகிய மூன்று பேரையும் கைதுசெய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கின் விசாரணை திருச்சி இரண்டாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது. வழக்கு விசாரணை முடிவடைந்ததைத் தொடர்ந்து நீதிபதி ஜெயக்குமார் தீர்ப்பளித்தார்.
மூன்று பேருக்கு ஆயுள் தண்டனை
அதில், ராஜா, பாண்டியராஜன், தினேஷ்குமார் ஆகிய மூன்று பேருக்கும் தலா ஒரு ஆயுள் தண்டனையும், தலா இரண்டாயிரம் ரூபாய் அபராதமும் விதித்தார். மேலும் அபராதத்தை கட்ட தவறினால் மேலும் ஒரு ஆண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் தனது தீர்ப்பில் குறிப்பிட்டார்.
ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து மூன்று பேரும் கைதுசெய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதையும் படிங்க : திருமணமான மூன்றே மாதங்களில் இளம்பெண் விஷமருந்தி தற்கொலை!