திருச்சி திருவானைக்காவலில் அருள்மிகு அகிலாண்டேஸ்வரி உடனுறை ஜம்புகேஸ்வரர் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த கோயிலில் சிலந்தி, சிவலிங்கத்தின் மேல் வலை பின்னி வெயில், மழை மற்றும் மரத்தின் சருகுகள் லிங்கத்தின் மேல் விழாமல் பாதுகாத்தது என்றும், யானை காவிரியில் இருந்து தன் துதிக்கை மூலம் நீரும் பூவும் கொண்டுவந்து வழிபட்டது என்பதும் தல வரலாறாக இருக்கிறது.
இத்தகைய சிறப்பு வாய்ந்த இத்திருக்கோயிலில் யானை முக்கியப் பங்காற்றுகிறது. இதற்காக கடந்த 2002ஆம் ஆண்டு ஒடிசாவில் பிறந்த அகிலா என்ற யானையானது, கடந்த 2011ஆம் ஆண்டு இத்திருக்கோயிலின் பூஜைகள் மற்றும் திருப்பணிகளுக்காக திருவானைக்காவல் கோயிலுக்கு கொண்டு வரப்பட்டது. இந்த கோயில் யானை அகிலாவால், காலை வேளை பூஜையில் தனது துதிக்கை மூலம் புனிதநீர் எடுத்து வரப்பட்டு, அதில் அபிஷேகம் செய்யப்படுவது வழக்கமாக நடைபெற்று வருகிறது.
தற்போது இந்த அகிலாவிற்கு 19 வயது நிறைவுபெற்று, நேற்று 20ஆவது வயதை எட்டியுள்ளது. இதனால், திருக்கோயில் சார்பில் யானைக்கு பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதற்காக கோயில் யானை தங்குமிடத்தில் இருந்து யானை அகிலா, மிகவும் அழகாக அலங்கரிக்கப்பட்டு அழைத்து வரப்பட்டது. பின்னர் திருக்கோயில் வளாகத்தில் உள்ள நந்தவனத்தில் உதவி ஆணையர் ரவிச்சந்திரன் முன்னிலையில் யானைக்கு பூஜைகள் நடத்தப்பட்டன.
தொடர்ந்து யானை பாகன்கள், அர்ச்சகர்கள், திருக்கோயில் பணியாளர்கள் மற்றும் பக்தர்கள் உள்ளிட்டப் பலரும் பங்கேற்று, யானை அகிலாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துப்பாட்டு பாடினர். இதன் பின்னர் பழங்கள், காய்கறிகள், கடலை மிட்டாய், கொழுக்கட்டை உள்ளிட்டப் பல்வேறு பொருட்களை வழங்கி யானை அகிலாவை அனைவரும் மகிழ்வித்தனர்.
இதற்கு யானையும் பக்தர்கள் மற்றும் பலரது வாழ்த்துகளை சமமாக பெறும் வகையில் தும்பிக்கையை ஆட்டி, தனது நன்றியைத் தெரிவித்தது. இதனால் பக்தர்கள் பலரும் மிகவும் ஆர்வத்துடன் தங்களது வாழ்த்துகளை கூறி விட்டுச் சென்றனர்.
இதையும் படிங்க: மல்லுக்கட்டான துவாக்குடி ஜல்லிக்கட்டு போட்டி