திருச்சி: 108 திவ்ய தேசங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என அனைவராலும் போற்றப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி கோயிலில் நேற்று(டிசம்பர் 22) திருநெடுந்தாண்டகத்துடன் வைகுண்ட ஏகாதசி திருவிழா தொடங்கியது.
முதல் நாள் திருவிழாவான இன்று(டிசம்பர் 23) விருச்சக லக்னத்தில் பெருமாள் ரத்தின நீள்முடி கிரீடம், கபாய் சட்டை, ரத்தின அபயஹஸ்தம், நெல்லிக்காய் மாலை, காசு மாலை உள்ளிட்ட, அடுக்கு பதக்கங்களை சூடியபடி மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு, கோவிந்தா கோபாலா மந்திரம் முழங்க அர்ஜுன மண்டபம் சென்றடைந்தார்.
முக்கிய நிகழ்ச்சியான வைகுண்ட ஏகாதசி பெருந்திருவிழா வருகின்ற ஜனவரி 2ஆம் தேதி நடைபெறுகிறது. 7.15 முதல் 11.30 மணி வரை அர்ஜுன மண்டபத்தில் பொதுமக்கள் பெருமாளை தரிசனம் செய்யலாம். பின்னர் 4 மணி முதல் 6 மணி வரை தரிசனம் செய்யலாம். இரவு 7 மணிக்கு அர்ஜுனா மண்டபத்தில் இருந்த புறப்பட்டு பெருமாள் மீண்டும் மூலஸ்தானம் சென்றடைவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வைகுண்ட ஏகாதசி விழாவின் பகல்பத்து உற்சவத்தின் முதலாம் திருநாள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஏராளமான பொதுமக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். கடந்த மூன்று வருடங்களாக கொரோனா கட்டுப்பாடால் குறைவான பக்தர்களே அனுமதிக்கப்பட்ட நிலையில், இந்த வருடம் கொரோனாவின் தளர்வுகள் முழுவதுமாக நீக்கப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: திருப்பதி ஏழுமலையான் கோயில் உண்டியல் வசூல் ரூ.1,000 கோடி