தமிழ்நாட்டில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு இன்று (மே. 24) முதல் ஒரு வாரத்திற்கு அமலில் உள்ளது. ஊரடங்கை கண்காணிக்கும் விதமாக திருச்சி மாவட்டத்தின் முக்கியப் பகுதிகளில் காவல் துறையினர் தடுப்புகளை ஏற்படுத்தியுள்ளனர். ஆம்புலன்ஸ், மருத்துவ தேவை தவிர அனைத்து விதமான போக்குவரத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் வாகன ஓட்டிகள் அரசின் உத்தரவுக்கு கட்டுப்படாமல் அதிகளவில் உலா வருகின்றனர். பழைய மருந்து சீட்டுகளை வைத்துக்கொண்டு மருந்துக் கடைகளுக்குச் செல்வதாகவும் வங்கி பாஸ்புக்கை எடுத்துக்கொண்டு வங்கிக்குச் செல்வதாகவும் கூறிக்கொண்டு ஊர் சுற்றி வருகின்றனர். பொதுமக்களின் இந்த செயல் காவல் துறையினருக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.
சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளவர்களுக்கு உணவு எடுத்துச் செல்வதாக கூறுகின்றனர். ஆனால் அவர்களிடம் அதற்கான ஆவணங்கள் எதுவும் இல்லாததால் அவர்களை காவல் துறையினர் திருப்பி அனுப்பிவிடுகின்றனர். இது போன்று சுற்றுபவர்களால் உண்மையாக மருத்துவமனைக்கு செல்பவர்கள் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: காய்கறி தொகுப்பு விலைப் பட்டியல் வெளியீடு!