திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த பொய்கை மலை வனப்பகுதியில் குரங்குகள் அதிகமாக வாழ்ந்து வருகின்றன. கோடைக்காலங்களில் இந்த குரங்குகளுக்கு வனப்பகுதியில் தண்ணீர் கிடைப்பதில்லை. இதனால் தண்ணீரைத் தேடி அலையும் இவை மணப்பாறை-துவரங்குறிச்சி சாலையில் சுற்றித் திரிவது வழக்கம். இச்சாலையில் செல்லும் வாகனங்களுக்கு சிலநேரம் இவை தொந்தரவாக அமைகிறது.
இந்நிலையில், வழக்கம்போல் இன்று கூட்டமாக மணப்பாறை-துவரங்குறிச்சி சாலை அருகே உள்ள மரங்களில் குரங்கு கூட்டம் சுற்றித்திருந்தது. அப்போது, அக்கூட்டத்திலிருந்த ஆறு மாத குரங்கு குட்டி ஒன்று வெயில் தாக்கத்தில் மரத்திலிருந்து மயங்கி சாலையோரத்தில் விழுந்தது.
இதையடுத்து, அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் குரங்கு குட்டியை காப்பாற்றி அதற்கு தண்ணீர், சாத்துக்குடி பழச்சாறுகள் கொடுத்தனர். பின்னர் வனத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவலின்பேரில், அங்கு வந்த வனத் துறை அலுவலர்களிடம் குரங்கு குட்டி ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து, குரங்கு குட்டியை வனத் துறை அலுவலகத்திற்கு எடுத்துச் சென்ற வனத் துறையினர் அங்கு பாதுகாப்புடன் வைத்துள்ளனர்.
இதுகுறித்த காணொளி தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவிவருகிறது.