தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறுகிறது. இதனையொட்டி வேட்பாளர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், திருச்சி மேற்கு சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக சார்பில் முன்னாள் அமைச்சரும், திமுக முதன்மைச் செயலருமான கே.என்.நேரு போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து அதிமுக சார்பில் பத்மநாபன், அம்மா மக்கள் முன்னேற்றக் கழக கூட்டணியில் எஸ்டிபிஐ கட்சியைச் சார்ந்த ஹஸ்ஸான், மக்கள் நீதி மையம் கூட்டணி சார்பில் அபூபக்கர் சித்திக் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில், திருச்சி மேற்குத் தொகுதிக்கு உள்பட்ட அரசு மருத்துவமனை காவல் நிலையத்திற்கு தலா இரண்டாயிரம் ரூபாய் அடங்கிய 12 கவர்களும், தில்லை நகர் காவல் நிலைத்திற்கு 24 கவர்களும் டெலிவரி செய்யப்பட்டன. இந்தக் கவர்கள் கே.என்.நேரு சார்பில் வழங்கப்பட்டதாக முன்னதாகத் தகவல்கள் பரவின. இதுகுறித்து விசாரணை நடத்த காவல்துறை ஆணையர் உத்தரவிட்டார். இதுதொடர்பாக தகவல் தேர்தல் ஆணையத்திற்கும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், கே.என்.நேரு தேர்தல் ஆணையத்திற்கு ஒரு மனு அனுப்பியுள்ளார். அதில், ”என் பெயரை களங்கப்படுத்தி தேர்தலை நிறுத்த சதி நடக்கிறது. அரசு அலுவலர்களுக்கு கவர் கொடுத்த விவகாரத்தில் என்னைத் தொடர்புபடுத்தி தகவல்கள் வெளியாகின்றன. இந்தத் தகவல் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
ஆகையால் இதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். இந்தத் தகவலை பரப்பிய நபர்கள் மீது தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார். தேர்தல் தேதி நெருங்கி வரும் சமயத்தில் காவல் நிலையங்களுக்கு பணம் விநியோகம் நடைபெற்ற சம்பவம் திருச்சியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.