திருச்சி: தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகளைத் தேர்வு செய்ய பிப்ரவரி மாதம் 19 ஆம் தேதி 2022 அன்று ஒரே கட்டமாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. சென்னை, கோயம்புத்தூருக்கு அடுத்த மூன்றாவது மிகப்பெரிய மாநகராட்சி திருச்சி. இந்த மாநகராட்சி 167.23 ச.கி.மீட்டர் கொண்ட பரந்து விரிந்த மாநகராட்சி ஆகும்.
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி பெருநகர மாநகராட்சியாக இல்லாத போதிலும் ஆண்டு வரி வருவாய் 615 கோடி ரூபாய் ஈட்டுகிறது. இது தமிழக மாநகராட்சிகளின் வரி வருவாயில் மூன்றாவது இடத்தைக் கொண்டுள்ளது. இன்னும் பத்தே நாட்களில் பதவியேற்று சதமடிக்கப்போகிறது அனைத்து மாநகராட்சிகளும்.
100 நாளில் செயல்பாடு: பாதாள சாக்கடைத்திட்டத்தை நிறைவு செய்கிறோம் என்ற போர்வையில் சாலை முழுவதும் பள்ளம் பள்ளமாக காட்சியளிப்பது ஒருபுறம், காவிரியும் கொள்ளிடமும் பாய்ந்தோடும் மாநகராட்சி என்ற பெயர் பெற்றிருந்தாலும் காலம் காலமாக காலையில் ஒருமணி நேரம் மாலையில் ஒருமணி நேரம் மட்டுமே குடிநீர் வழங்கப்படுகிறது.
மில்லிங் செய்துதான் சாலைகள் அமைக்க வேண்டும் என்கிறது அரசு ஆணை. ஆனால், பெயரளவில் சும்மா கோடு போட்டுவிட்டு சாலை போடப்படுவதாக குற்றம்சாட்டுகிறார்கள் பொது மக்கள். பகல் இரவு பாராமல் படையெடுப்பு நடக்கும் மாடு மற்றும் நாய்களால் விபத்து ஏற்படும் அச்சம் நிலவுகிறது. மாநகராட்சி பகுதிகளில் மாடுகள் சுற்றித்திரிந்தால் ரூபாய் பத்தாயிரம் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் சர்வசாதாரணமாக சாலையில் தென்படுகின்றன.
நூறு நாட்கள் சாலைகள் கூட போட முடியாத நிலையில் வீட்டுவரி உயர்வு குறித்த கணெக்கெடுப்பை நடத்த ஆரம்பித்துவிட்டது மாநகராட்சி என்கின்றார்கள். மக்களுக்கு வேண்டிய நல்ல விஷயங்களை முதலில் செய்து கொடுத்தால் மக்களே சந்தோஷப்பட்டு நீங்கள் அறிவிக்கும் அனைத்தையும் ஏற்றுக்கொள்வார்கள் என்ற கூக்குரலும் ஒலிக்கிறது. மனசு வைக்குமா மாநகராட்சி, பார்ப்போம்.
இதையும் படிங்க: NIITல் சூப்பர் கம்ப்யூட்டர் சென்டர் !