திருச்சி, கரூர், புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர் உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களை உள்ளடக்கிய திருச்சி சரகக் காவல் துறையில் நடைபெற்ற கொலை வழக்குகளில் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தந்த காவல் துறை புலனாய்வு அலுவலர்கள், அரசு வழக்கறிஞர்கள், சாட்சிகள், நீதிமன்ற காவலர்கள் ஆகியோருக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
திருச்சி சுப்பிரமணியபுரத்தில் உள்ள மாவட்ட ஆயுதப்படை சமுதாயக் கூடத்தில் நடந்த இந்த பாராட்டு விழாவில் திருச்சி சரக டிஐஜி பாலகிருஷ்ணன் கலந்துகொண்டு புலனாய்வு அலுவலர்களுக்கு சான்றிதழை வழங்கி பாராட்டினார். இந்த விழாவில் திருச்சி எஸ்பி ஜியாவுல் ஹக் மற்றும் டிஎஸ்பிக்கள், இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
விழா மேடையில் டிஐஜி பாலகிருஷ்ணன் பேசுகையில், "கொலை வழக்குப் பதிவு செய்வது முதல் தீர்ப்பு வரும் வரை அனைவரும் கவனமாக செயல்பட வேண்டியது கட்டாயமாகும். இதில் ஏதேனும் ஒரு இடத்தில் தடுமாற்றம் ஏற்பட்டாலும் குற்றவாளிகள் விடுதலையாகிவிடுவார்கள். ஒரு குழந்தையை பெற்றெடுத்து வளர்ப்பது போல் கொலை வழக்கு விசாரணையை கண்ணும் கருத்துமாக பார்த்து தண்டனை வாங்கித் தரவேண்டும்.
கொலை குற்றங்களில் ஈடுபட்டால் தண்டனை கண்டிப்பாக கிடைக்கும் என்று குற்றவாளிகள் அச்சப்பட கூடிய சூழ்நிலையை உருவாக்க வேண்டும். அவ்வாறு செய்தால்தான் கொலை குற்றங்கள் தடுக்கப்படும். கொலை குற்றத்தில் ஈடுபட்டால் தண்டனை உறுதி என்ற நிலையை உருவாக்கும் நோக்கத்துடன் இந்த விழா நடத்தப்படுகிறது" என்றார்.
இதனைத்தொடர்ந்து டிஐஜி பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசுகையில், "2019 ஆம் ஆண்டில் தண்டனை வழங்கப்பட்ட 17 வழக்குகளின் விசாரணை அலுவலர்கள், சாட்சிகள், அரசு வழக்கறிஞர்கள் இங்கே கௌரவிக்கப்பட்டுள்ளனர். இதில் 7 ஆண்டுகள், 10 ஆண்டுகள், ஆயுள் தண்டனை, இரட்டை ஆயுள் தண்டனை என தண்டனைகள் விதிக்கப்பட்டுள்ளது.
திருச்சி சரகத்தில் சராசரியாக ஆண்டுக்கு 90 முதல் 100 கொலை வழக்குகள் பதிவாகிறது. இவையனைத்தும் குடும்ப பிரச்னை மற்றும் சொத்து தகராறு காரணமாக நடைபெற்றுள்ளது. கொலை என்பது கொடூர குற்றமாகும். இதில் கண்டிப்பாக தண்டனை பெற்றுத் தருவது காவல்துறையின் கடமை.
சாட்சிகளை மிரட்டுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" என்று அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஒரேநாளில் 73 பவுன் நகைக் கொள்ளை - தாம்பரத்தில் கொள்ளையர்கள் கைவரிசை