உலகையே அச்சுறுத்திவரும் கரோனா வைரஸ் தாக்குதலை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் வரும் ஏப்ரல் 14ஆம் தேதிவரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் திருச்சி மாவட்டத்தில் 144 தடை உத்தரவு அமலில் உள்ளது.
இந்த உத்தரவை மீறி தெருக்களில் கூடியவர்கள் மீது காவல் துறை மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. முதல்நாளான நேற்று திருச்சி மாநகரில் தடை உத்தரவை மீறி பொது இடங்களில் உலாவிய 52 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதேபோல், திருச்சி மாவட்டம் முழுவதும் காவல் துறையினர் ரோந்து பணியிலும், வாகன தணிக்கையிலும் ஈடுபட்டனர். அப்போது, அத்தியாவசிய, அவசர காரணங்கள் ஏதுமின்றி தடையை மீறி இருசக்கர வாகனத்தில் முகக்கவசம் அணியாமல் வந்த ஆயிரத்து 122 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
எனவே 144 தடை உத்தரவை மீறுபவர்கள் மீதும், இருசக்கர வாகனத்தில் காரணங்கள் ஏதுமின்றி சுற்றுபவர்கள் மீதும் தொடர்ந்து கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வழக்குகள் பதிவு செய்யப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல் ஹக் எச்சரிக்கை விடுத்துள்ளார். எனினும் இன்றும் வாகன ஓட்டிகள் பலர் வீதிகளில் வாகனங்களை ஓட்டி வந்ததை பார்க்க முடிந்தது. மீண்டும் அவர்களை காவல் துறையினர் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க:ஊரடங்கில் வெளியே வந்த 57 நபர்கள் மீது வழக்குப்பதிவு - மாவட்ட காவல்துறை தகவல்