புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் சம்யுக்தா(24). இவர் காவல் துறையில் காவலர் பணிக்கு தேர்வாகியுள்ளார். இதையடுத்து அவர் திருச்சி மாவட்டம் நவல்பட்டு போலீஸ் காலனி பகுதியில் உள்ள காவல் பயிற்சி பள்ளியில் பயிற்சி பெற்று வருகிறார்.
இந்நிலையில் அவர் கடந்த 9ஆம் தேதி விஷம் குடித்து தற்கொலை முயற்சி செய்தார்.
அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு உடனடியாக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதுகுறித்து நவல்பட்டு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தனர். விசாரணையில் பயிற்சி கல்லூரியின் முதல்வர், துணை முதல்வர் ஆகியோர் அடிக்கடி பாலியல் ரீதியாக அவதூறான முறையில் சம்யுக்தாவை பேசியதாக தெரிகிறது.
இதுதொடர்பாக பயிற்சி பள்ளி டிஐஜி.யிடம் சம்யுக்தா புகார் அளித்தார்.அதனடிப்படையில் தூத்துக்குடி காவல் கண்காணிப்பாளர் நேரில் வந்து விசாரணை மேற்கொண்டுள்ளார். இந்த விசாரணைக்கு சம்யுக்தாதான் காரணம் என்று கூறி பயிற்சிப் பள்ளியில் பணியாற்றும் உதவி ஆய்வாளர் அசோக் குமார் மற்றும் இரண்டாம் நிலை காவலர் இஸ்ரேல் ஆகியோர் சம்யுத்தாவை திட்டியுள்ளனர்.
இதனால் மனமுடைந்து தற்கொலைக்கு அவர் முயன்றிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக காவலர் பயிற்சி பள்ளி முதல்வர், துணை முதல்வர் மற்றும் பணியாளர்களிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.
விசாரணையின் அடிப்படையில் உதவி காவல் ஆய்வாளர் அசோக்குமார், இரண்டாம் நிலை காவலர் இஸ்ரேல் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.