மணப்பாறையில் காவல்துறையினர் சார்பில் தலைக்கவசம், சாலை பாதுகாப்பு ஆகியவை குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் சர்மு கொடியசைத்து தொடங்கி வைத்தார். காமராஜர் சிலையில் தொடங்கிய பேரணி முக்கிய வீதிகளின் வழியாக பெரியார் சிலையை வந்தடைந்தது.
இதில், போக்குவரத்து காவல்துறையினரும் பங்கேற்று தலைக்கவசம் அணிவதன் அவசியத்தை பல்வேறு முறைகளில் பொதுமக்களுக்கு எடுத்துரைத்தனர். இந்த விழப்புணர்வு பேரணியில் 50-க்கும் மேற்பட்ட தனியார் பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டு சாலை பாதுகாப்பு குறித்த பதாகைகளை ஏந்தியவாறு ஊர்வலமாக சென்றனர்.
இந்த நிகழ்ச்சியின் இறுதியில் மாணவர்கள் தலைக்கவசம் அணிந்தபடி விழிப்புணர்வு பாடலுக்கு கொக்கலிக்கட்டை ஆட்டம் ஆடியது, அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகளை வெகுவாக கவர்ந்தது. இறுதியாக, பொதுமக்களுக்கு இலவசமாகத் தலைக்கவசம் வழங்கப்பட்டது. காவல்துறையினரின் இச்செயல் பொது மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.