திருச்சி அரியமங்கலம் அருகே உள்ள காந்திமார்க்கெட்டில் செயல்பட்டுவந்த காய்கறி கடைகள் அனைத்தும் கரோனா தடுப்பு நடவடிக்கையாக பொன்மலை ஜீ கார்னர் மைதானத்திற்கு மாற்றப்பட்டு செயல்பட்டு வருகிறது.
இதேபோல் காந்திமார்க்கெட் வெளியே சுற்றுபுறத்தில் தள்ளுவண்டி கடைகள், மளிகை கடைகள், எண்ணெய் கடைகள், உரக்கடை, பழக்கடை போன்று பல விதமான கடைகள் செயல்பட்டு வருகின்றன. முழு ஊரடங்கான ஞாயிற்றுக்கிழமை தவிர இதர நாள்களில் இந்த கடைகள் வழக்கம் போல் செயல்பட்டு வந்தன.
இந்நிலையில், ஜூலை 29ஆம் தேதி இந்த வியாபாரிகளில் 93 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 8 பேருக்கு தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதனால் இந்த கடைகளுக்கு வந்துசென்ற பொதுமக்களுக்கும் கரோனா பரவி இருக்குமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.
இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த வெளிப்புற கடைகளை அடைக்க மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டது. மேலும், இந்த கடைகள் அடங்கிய சாலைகளான தஞ்சை மெயின்ரோடு, நெல்பேட்டை சாலை, தர்போர் மேடு, பாலக்கரை மெயின்ரோடு, வெல்லமண்டி ரோடு, மீன் மார்க்கெட் சாலை உள்பட 10 சாலைகளில் மக்கள் நடமாட தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனால் இந்த பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்டவையாக அறிவிக்கப்பட்டு தடுப்புகளை அமைத்து மக்கள் நடமாடவும், வாகன போக்குவரத்துக்கும் மாநகராட்சி நிர்வாகம் தடை விதித்துள்ளது. இன்று (ஆகஸ்ட் 2) முதல் 14 நாள்களுக்கு இந்த தடை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காந்திமார்க்கெட் உள்புற கடைகளை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று வியாபாரிகள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், தற்போது வெளிப்புற கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன.
மேலும், கடந்த மாதம் ஜவுளி, நகை, பாத்திரக் கடைகளில் பணியாற்றிய ஊழியர்களுக்கு அதிகளவில் கரோனா தொற்று இருந்ததால் திருச்சி என்எஸ்பி ரோடு, பெரிய கடை வீதி, சின்ன கடை வீதி, நந்தி கோயில் தெரு உள்ளிட்ட கடைவீதிகள் இதேபோல் மாநகராட்சி நிர்வாகம் தடுப்பு அமைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.