தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க திருச்சி மாவட்ட பிரதிநிதித்துவப் பேரவைக் கூட்டம் நடைபெற்றது. திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் விடுதியில் நடைபெற்ற இந்தக் கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் விவேகானந்தன் தலைமை வகித்தார். மாவட்டத் துணைத் தலைவர் ஜீவானந்தம் அஞ்சலி தீர்மானத்தை முன்மொழிந்தார். மாவட்ட இணைச் செயலாளர் ராஜேந்திரன் வரவேற்புரையாற்றினார்.
மாநிலத் துணைத் தலைவர் பெரியசாமி கூட்டத்தை தொடங்கிவைத்துப் பேசினார். மாவட்டச் செயலாளர் பழனிச்சாமி சங்கத்தின் வேலை அறிக்கையைச் சமர்ப்பித்தார். மாவட்ட பொருளாளர் சுந்தரராஜன் வரவு-செலவு அறிக்கை சமர்ப்பித்தார்.
இந்தக் கூட்டத்தில் மாவட்டத் துணைத் தலைவர்கள் சகாதேவன், பழனியப்பன், மாவட்ட இணைச் செயலாளர்கள் ரேவதி, வெங்கடேசன், மகளிர் துணைக் குழு அமைப்பாளர் சத்தியவாணி ஆகியோர் தீர்மானங்களை வாசித்தனர். மாநிலப் பொருளாளர் பாஸ்கரன் நிறைவுரை ஆற்றினார். மாநிலச் செயற்குழு உறுப்பினர் பாக்கியசெல்வம் நன்றி கூறினார்.
ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்ட ஐந்தாயிரத்து 68 பேர் மீது வழங்கப்பட்டுள்ள குற்ற குறிப்பு ஆணையை ரத்துசெய்ய வேண்டும். சிறப்பு காலமுறை ஊதிய பெற்றுவரும் சத்துணவு, அங்கன்வாடி, வருவாய், கிராம உதவியாளர்கள், ஊர்ப்புற நூலகர்கள், தொகுப்பூதியத்தில் பணியாற்றும் செவிலியர், பல்நோக்கு மருத்துவப் பணியாளர்கள் ஆகியோருக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும்.
சாலைப் பணியாளர்களின் 41 மாத பணிநீக்க காலத்தைப் பணிக்காலமாக வரைமுறைப்படுத்த வேண்டும். அவுட்சோர்சிங், மதிப்பூதியம், தொகுப்பூதியம் ஆகிய நியமனங்களைக் கைவிட்டு அரசுத் துறைகளில் காலியாக உள்ள அனைத்துப் பணியிடங்களையும் காலமுறை ஊதியம் ஏற்ற முறையிலான நியமனங்கள் மூலமாக உடனடியாக நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.