திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கை மற்றும் குடிமராமத்துப் பணி குறித்த ஆய்வுக்கூட்டம், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று (ஜூன் 26) நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது, 'உலகையே அச்சுறுத்திவரும் கரோனா வைரஸ் தொற்றுப்பரவலைத் தடுக்க தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. இந்தப் பேரழிவைத் தடுக்க மத்திய அரசு அமல்படுத்திய ஊரடங்கை, மாநில அரசு சரியான முறையில் பின்பற்றியதால் தொற்றுப் பரவல் தடுக்கப்பட்டுள்ளது.
வளர்ந்த நாடுகளில் கூட கரோனாவால் அதிக உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் சரியான நடவடிக்கை எடுக்கப்பட்டதால் அதிக அளவிலான உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
கரோனா தாக்குதலால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக பாதிப்படைந்த தொழில்களை மேம்படுத்த மத்திய அரசு நான்காயிரத்து 145 கோடி ரூபாயை தமிழ்நாட்டிற்கு ஒதுக்கீடு செய்துள்ளது. இதன்மூலம் 74 ஆயிரத்து 388 நிறுவனங்களுக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது. இந்தத் தொகை மூலம் சிறு, குறு, நடுத்தர தொழிற்சாலைகளுக்கு கடன் வழங்கப்பட்டு வருகிறது.
உலகத் தொழில் முதலீட்டு மாநாட்டைத் தொடர்ந்து, திருச்சியில் மூன்றாயிரத்து 512 கோடி ரூபாய் மதிப்பில், ஐந்து பன்னாட்டு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் ஆறாயிரத்து 322 பேருக்கு மறைமுகமாகவும், நேர்முகமாகவும் வேலைவாய்ப்புகள் கிடைக்கும். தமிழ்நாடு முழுவதும் இந்த திட்டத்தின் மூலம் 17 நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
9 ஆண்டுகளுக்குப் பிறகு குறித்த நேரத்தில் குறுவை சாகுபடி பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கடைமடைப் பகுதிவரை தண்ணீர் சென்றடையும் வகையில் பொதுப்பணித்துறையினர் கணக்கிட்டு படிப்படியாக தண்ணீர் திறந்துவிட்டு வருகின்றனர். குடிமராமத்துப் பணிகள் அனைத்தும் உரிய நேரத்தில் முடிக்க ஆட்சியர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
வரலாற்றுச் சாதனையாக, இந்த ஆண்டு டெல்டா பகுதிகளில் தற்போது வரை 25.10 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் 2 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. இதுவரை 23 லட்சம் மெட்ரிக் டன்னை கடந்து கொள்முதல் ஆனதில்லை. ஆனால், வரலாற்றுச் சாதனையாக தற்போது 27 லட்சம் மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது' என்றார்.
ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? என்ற செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த முதலமைச்சர், 'முன்னதாக, ஆட்சியர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. வரும் திங்கட்கிழமை அன்று மருத்துவ நிபுணர்கள் வல்லுநர்கள் குழுக்களுடன் ஆலோசனைக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்தும், மத்திய அரசின் அறிவிப்பை பொறுத்தும் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்பது குறித்து தெரிவிக்கப்படும்' என்றார்.
மேலும் அவர் கூறுகையில், 'நகர கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதாக அறிக்கை வெளியாகியுள்ளது. கூட்டுறவு வங்கிகள் ஏற்கெனவே உள்ள நடைமுறைப்படி தொடர்ந்து செயல்பட வேண்டும் என்று மத்திய அரசுக்குக் கடிதம் எழுதப்பட்டுள்ளது. விவசாயிகளுக்குத் தொடர்ந்து இலவச மின்சாரம் வழங்கப்படும்.
தற்போது ஏற்பட்டிருப்பது ஒரு புதிய நோய். இதை ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் தடுக்கமுடியும் என்று கூறிவிட முடியாது. இதற்கு மருந்து கண்டுபிடித்தால் தான் ஒழிக்க முடியும்.
இது இரு மாநில பிரச்னை கிடையாது. அதனால் அனைத்துக் கட்சி கூட்டம் நடத்த வேண்டிய அவசியமில்லை. மருத்துவத்துறையினரின் ஆலோசனை அடிப்படையில் தான் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
கடந்த இரண்டு மாதங்களில் 35 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. தொழில்கள், கடைகள் முடங்கி இருப்பதால் மாதந்தோறும் 13 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படும் என்று கணிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் தற்போது வரை 85 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனினும், முடிந்தவரை மக்களுக்கு அரசு உதவி செய்து வருகிறது' என்றார்.