சென்னையில் கரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்த மருத்துவரின் உடலை புதைக்க அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து தாக்குதலில் ஈடுபட்டனர். இது பல தரப்பு மக்களிடையே விமர்சனம் ஆகியுள்ளது.
இதுகுறித்து திருச்சி மகப்பேறு மருத்துவர் ரொஹயா கூறுகையில், "கரோனா தொற்று என்பது ஒரு போராக நடந்து வருகிறது. மருத்துவர்களுக்கு வாழ்த்து கூறுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறீர்கள். அது எங்களுக்குத் தேவையில்லை. ஒவ்வொரு மனிதனும் இறக்கும் பொழுது இறுதியாத்திரை அவர்களுடைய மத சடங்குகள் படி நடக்க வேண்டும் என்று தான் நினைப்பார்கள்.
சென்னையில் உயிரிழந்த நரம்பியல் மருத்துவர் விபத்தில் சிக்கிய பலரை காப்பாற்றி உள்ளார். விபத்தில் சிக்கியவருக்கு சிகிச்சை அளித்தபோது அவருக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அந்த பாதிப்பினால் அவர் உயிரிழந்தார்.
அவரை இடுகாட்டிற்கு எடுத்துச் செல்லும் வழியில் பொதுமக்கள் கூடி அவரை புதைக்கக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். உடலை கொண்டு சென்ற அமரர் ஊர்தியை அடித்து உடைத்துள்ளனர். ஆம்புலன்ஸ் டிரைவரை அடித்துள்ளனர். இப்படியெல்லாம் செய்வது நீங்கள் மருத்துவருக்கு செய்யக்கூடிய மரியாதையா? நீங்கள்தான் எங்களை காப்பாற்றக் கூடியவர், நீங்கள் தான் கடவுள் போன்றவர் என்று கூறும் மக்கள் இப்படி ஒரு மருத்துவரின் இறுதி சடங்கில் இப்படிப்பட்ட செயல்களை செய்துள்ளது மனதுக்கு வேதனை அளிக்கிறது" என வருத்தத்தோடு தெரிவித்தார்.
இதையும் படிங்க: உயிரிழந்தவரின் உடலில் இருந்து கரோனா பரவாது'- நடிகர் விவேக்