திருச்சி: திருச்சி மாவட்டம் தொட்டியம் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவராக பதவி வகித்தவர், திமுகவைச் சேர்ந்த புனிதராணி. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சத்தியமூர்த்தி, துணைத் தலைவராக உள்ளார்.
இந்த ஊராட்சி ஒன்றியத்தில் 19 கவுன்சிலர்கள் உள்ளனர். இந்தநிலையில் புனிதராணி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்னிறுத்தி கவுன்சிலர்கள் கடந்த 27.4.2022 அன்று முசிறி கோட்டாட்சியர் மாதவன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் ஒன்றிய குழு தலைவராக பதவி வகிக்கும் புனிதராணியை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவந்தனர்.
இதையடுத்து ஒன்றிய குழுத் தலைவர் புனிதராணி பெரும்பான்மையை நிரூபிக்க இயலாத நிலை ஏற்பட்டது. இந்தநிலையில் ஒன்றிய குழு தலைவர் புனிதராணியை பதவி நீக்கம் செய்து சென்னையிலிருந்து ஊரக வளர்ச்சித் துறைச்செயலாளர் அமுதா இன்று (ஜூன்16) அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். திமுகவைச் சேர்ந்த ஒன்றிய குழு தலைவர் பதவி நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: நியாய விலைக்கடை பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வு: தமிழ்நாடு அரசு அறிவிப்பு!