திருச்சி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் திருநாவுக்கரசர் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் வெற்றி பெற்ற பின்னர் திருச்சியில் அலுவலகம் அமைக்கப்படும், மக்கள் குறைகள் கேட்கப்படும், திருச்சியில் அரைகுறையாக நிற்கும் ரயில்வே மேம்பாலம் உள்ளிட்ட பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் உள்ளிட்ட வாக்குறுதிகளை அளித்திருந்தார்.
வெற்றி பெற்ற பிறகு அவர் திருச்சியில் அலுவலகமும் அமைக்கவில்லை. அதோடு தொகுதிக்கும் சரிவர வருவதில்லை என்று புகார் எழுந்தது. இந்நிலையில், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திருநாவுக்கரசருக்கு தேர்தல் பணியாற்றிய மஜ்லிஸ் கட்சியினர் திருச்சி அரியமங்கலம் காவல்நிலையத்தில் இரு தினங்களுக்கு முன்பு ஒரு புகார் மனு அளித்தனர்.
அதில், திருச்சி தொகுதி எம்பி திருநாவுக்கரசரை காணவில்லை என்று தெரிவித்திருந்தனர். இந்த புகார் குறித்த செய்தி சமூக வலைதளங்களில் பரவியதையடுத்து, இன்று பாதியில் நிற்கும் திருச்சி ஜங்ஷன் ரயில்வே மேம்பாலத்தை திருநாவுக்கரசர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘நான் அவ்வப்போது தொகுதிக்கு வருகை தந்து மக்களிடம் குறைகளைக் கேட்டு வருகிறேன். சிலருக்கு நிதி உதவியும் அளித்துள்ளேன். நாடாளுமன்ற நிகழ்வுகள் ஒன்றரை மாதம் நடந்தது. அதோடு எனது வீட்டில் இரண்டு துக்க நிகழ்வுகள் நடந்துவிட்டது.
நான் 40 ஆண்டு காலமாக அரசியலில் இருக்கிறேன். இது இந்த தொகுதி மக்களுக்கும் தெரியும். அதனால் தான் என்னை வெற்றி பெறச் செய்தார்கள். இந்தச் சூழ்நிலையில் என்னை காணவில்லை என்று போலீசில் புகார் அளித்துள்ளனர். அந்த புகார் மனுவையும் போலீசார் ஏற்கவில்லை.
என் மீது புகார் அளித்தவர்கள் பைத்தியக்காரர்கள். வேலை வெட்டி இல்லாதவர்கள். அடையாளம் தெரியாதவர்கள். யாருடைய தூண்டுதல் பேரில் புகார் கொடுத்தார்கள் என்பது தெரியவில்லை. என் மீது புகார் அளித்தவர்கள் மீது வழக்கு தொடரப்படும்’ என்று கூறியுள்ளார்.