திருச்சி விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “டெல்லியில் நடந்த வன்முறை உலக அளவில் இந்தியாவை தலைகுனிய வைத்துள்ளது. குஜராத்தில் திட்டமிட்டு நடந்த வன்முறை போலவே டெல்லியிலும் நடந்துள்ளது. இதற்கு காரணமானவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படவில்லை. மீண்டும் தொடங்கவுள்ள நாடாளுமன்ற கூட்டத்தொடரில் டெல்லி வன்முறை குறித்து விவாதிக்க வேண்டும்.
அமித் ஷா பதவி விலக வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்துகிறோம். டெல்லி வன்முறை குறித்து விசாரிக்க உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்க வேண்டும். இச்சட்டத்துக்கு எதிராக தமிழ்நாடு அரசு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.
இஸ்லாமியர்களை தனிமைப்படுத்தும் முயற்சிக்கு அதிமுக உடன்படக்கூடாது. தமிழருவி மணியன் ரஜினிகாந்தின் அதிகாரப்பூர்வ செய்தி தொடர்பாளர் கிடையாது. அவர் தன்னுடைய தனிப்பட்ட கருத்தைதான் கூறுகிறார்” என்றார்.