திருச்சி கிழக்கு வட்டாட்சியர் புதிய அலுவலகத்திற்கான பூமி பூஜை கொட்டப்பட்டு பகுதியில் நேற்று (பிப்.17) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் வளர்மதி ஆகியோர் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் வெல்லமண்டி நடராஜன் கூறியதாவது, "திருச்சியில் மீண்டும் போட்டியிட நல்ல நாள் பார்த்து விருப்ப மனு அளிப்பேன். எந்த தொகுதியில் போட்டியிட வேண்டும் என தலைமை கூறுகிறதோ அங்கு போட்டியிடுவேன்.
அதிமுகவில் எந்தவித கருத்து வேறுபாடும் கிடையாது. அரசு விளம்பரங்களையே முதலமைச்சர் வழங்குகிறார். வேண்டுமென்றே சிலர் அதை விமர்சனம் செய்து அதன் மூலம் ஆதாயம் தேட முயல்கிறார்கள். மக்களுக்கு நல திட்டங்கள் சென்று சேர்ந்துள்ளதா என்பதை வரும் தேர்தல் பறைச்சாற்றும். மக்கள் அளிக்கும் தீர்ப்பை ஏற்றுக்கொள்வோம்.
அதிமுக கூட்டணி 234 தொகுதிகளிலும் வெற்றி பெறும். அதிமுகவின் பொதுச்செயலாளர் சசிகலா என கூறுவது அவர்களுடைய கருத்து. அதற்கு பதில் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை. அதிமுகவிற்கு மக்கள் பலம்தான் உள்ளது என்று தெரிவித்தார்.
ஓபிஎஸ் பரதனாக இல்லாமல் ராவணனுடன் சேர்ந்து விட்டார் என டி.டி.வி. தினகரன் கருத்துக்கு பதில் அளித்த வெல்லமண்டி நடராஜன், மாற்றுக்கட்சியினர் அதிமுக மீது எந்த வித விமர்சனம் வைத்தாலும் அதற்கு பதில் அளிக்க தலைமையிலிருந்து நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டுள்ளார்கள். அவர்கள் அதற்கு சிறப்பான பதில் அளிப்பார்கள்” என்றார்.