திருச்சி மாவட்டம் மணப்பாறை வனச்சரகத்திற்கு உட்பட்ட கொசவ மலைப் பகுதியைச் சார்ந்த முத்தழகம்பட்டி கிராமத்தில், துரைராசு(50) என்பவர் மலையை ஒட்டிய தனது தோட்டத்தில் ஆடுகளை வளர்த்து வருகிறார்.
இன்று அதிகாலை தோட்டத்திற்கு சென்று பார்த்தபோது ஆடுகள் வன விலங்கால் கடிபட்டு இறந்தும், உயிருக்கு போராடிய நிலையிலும் கிடந்துள்ளன. மொத்தம் 12 ஆடுகள் கடிபட்டு கிடந்ததில் 4 ஆடுகள் இறந்தும், 6 ஆடுகள் கவலைக்கிடமான நிலையிலும் இருந்துள்ளன.
மேலும் தனது தோட்டத்தில் காவலுக்காக வளர்த்த நாயும் கடிபட்டு இறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறை அதிகாரிகள் ஆடுகளை தாக்கிய வன விலங்கின் கால்தடத்தை பார்வையிட்டு அது என்ன விலங்கு என அறிந்துகொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், சம்பவ இடத்திற்கு வந்த கால்நடை மருத்துவர்கள் பாதிக்கப்பட்ட ஆடுகளுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். இறந்த ஆடுகளுக்கு உரிய இழப்பீடு தொகையை வழங்க அரசு நடவடிக்கை எடுக்கும் படி பாதிக்கப்பட்ட ஆடுகளின் உரிமையாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.