தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் கல்வித் தகுதி பெற்றவர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்-1, தாள்-2 ஆகிய தேர்வுகள் இன்றும், நாளையும் நடைபெறுகிறது. அதன்படி இன்று தாள்-1க்கான தேர்வு தொடங்கியது. திருச்சி மாவட்டத்தில் உள்ள 19 மையங்களில் நடைபெறும் தேர்வில் 6 ஆயிரத்து 864 பேர் கலந்து கொண்டு தேர்வு எழுதினர். இதில் மாற்றுத்திறனாளிகள் 121 பேர் கலந்துகொண்டனர். தேர்வு பணியில் 19 முதன்மை கண்காணிப்பாளர்கள், 19 கூடுதல் கண்காணிப்பாளர்கள், 19 துறை அலுவலர்கள், 19 கூடுதல் துறை அலுவலர்கள், 144 அறை கண்காணிப்பாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
திருச்சி காஜா மியான் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையத்தை ஆட்சியர் சிவராசு நேரில் பார்வையிட்டு கேட்டறிந்தார். திருச்சி மாவட்டத்தில் பள்ளிக்கல்வித் துறை, வருவாய்த்துறை, காவல்துறை, போக்குவரத்துத் துறை, மின்சாரத் துறை, தீயணைப்புத் துறை சார்ந்த அலுவலர்கள், பணியாளர்கள் தேர்வுக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
தாள் 2-க்கான தேர்வு நாளை 49 மையங்களில் நடைபெறுகிறது. இதில் மாற்றுத்திறனாளிகள் 226 பேர் உட்பட, 17 ஆயிரத்து 371 பேர் கலந்துகொள்கின்றனர்.