தஞ்சை பெரிய கோயில் உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் மணியரசன், திருச்சி பிரஸ் கிளப்பில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,பிப்ரவரி 5ஆம் தேதி தஞ்சை பெருவுடையார் கோயிலில் குடமுழுக்கு விழா நடைபெறவுள்ளது. இந்த விழாவை தமிழர் ஆன்மீக மரபுப்படி தமிழில் நடத்த வேண்டும், சமஸ்கிருத குடமுழுக்கு நடத்துவதை கைவிட வேண்டும் என்ற கோரிக்கையினை மையப்படுத்தி வருகிற 22ஆம் தேதி தஞ்சை பெரிய கோயில் உரிமை மீட்புக் குழு சார்பில் மாநாடு நடைபெறவுள்ளது. தஞ்சை பெரிய கோயில் தமிழ் ஆகம விதிப்படிதான் கட்டப்பட்டுள்ளது. ஆகம விதிகள் தமிழில் இருந்துதான் சமஸ்கிருதத்தில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளனவே தவிர சமஸ்கிருத மொழியில் ஆகம விதிகள் இல்லை. எனவே தஞ்சை பெரிய கோயிலில் தமிழிலேயே குடமுழுக்கு நடத்தப்பட வேண்டும்.
அமைச்சர் பாண்டியராஜன் தமிழிலும் சமஸ்கிருதத்திலும் குடமுழுக்கு நடத்தப்படும் என கூறியுள்ளார். அமைச்சர் கடம்பூர் ராஜூ சமஸ்கிருதத்தில்தான் குடமுழுக்கு நடத்தப்படும் என்று கூறியுள்ளார். அமைச்சர்களின் இந்த கருத்துகள் தமிழுக்கும், தமிழ் ஆன்மிகத்திற்கும் எதிரானது. நீதிமன்ற உத்தரவை மீறுவதாகவும் உள்ளது. இந்த விவகாரத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் தலையிட்டு தெளிவுபடுத்த வேண்டும். தி.மு.க தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் முதலமைச்சர் தமிழ் வழியில் குடமுழுக்கு நடத்த வழிவகை செய்ய வேண்டும். இதற்காகவே இந்த வேண்டுகோள் மாநாடு நடத்துகிறோம் என்றார்.