திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, கரூர், அரியலூர், கடலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த கூட்டுறவுத் துறையின் மண்டல இணைப்பதிவாளர்கள் மற்றும் மத்திய கூட்டுறவு வங்கிகளின் மேலாண்மை இயக்குனர்கள் உடனான ஆய்வுக் கூட்டம் திருச்சி ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, ஆட்சியர் சிவராசு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செல்லூர் ராஜூ, விவசாயிகளுக்கு தங்கு தடையின்றி கடனுதவிகள் கட்டுப்பாடற்ற முறையில் உரங்கள் கிடைக்கவும், விவசாயிகளுக்கு அத்தியாவசிய பொருட்கள், மூலப் பொருட்கள் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே இந்த ஆய்வுப் பணி நடத்தப்பட்டது. இந்த ஆண்டுக்கு 10 ஆயிரம் கோடி ரூபாய் வட்டியில்லா பயிர்க்கடன் வழங்க நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு 2 ஆயிரத்து 340 கோடி ரூபாய் கடன் வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், தமிழ்நாட்டில் விவசாய கடன் தள்ளுபடி செய்வதற்கான சாத்தியக் கூறுகள் இப்போது இல்லை. ஆனால், திமுக தலைவர் ஸ்டாலின் தேர்தல் நேரத்தில் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று வெற்று அறிக்கை விடுக்கிறார். திமுக எப்போதுமே பொய்யான வாக்குறுதி, நிறைவேற்ற முடியாத வாக்குறுதியை கொடுத்து தேர்தலில் வெற்றிபெற்றுள்ளது என்று கடுமையாக விமர்சித்து பேசினார்.