திருச்சி: மருங்காபுரியை அடுத்த மஞ்சம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த நாராயணசாமி என்பவரது மகன் சுப்ரமணியன். இவர் விவசாய தொழில் செய்து வருகிறார். இவருக்கு மஞ்சம்பட்டியில் சுமார் 13 ஏக்கர் பரப்பளவில் சொந்தமாக விவசாய நிலம் உள்ளது. இந்த நிலத்தின் அருகில் உள்ள நெடுஞ்சாலை வழியாகச் செல்லும் மின்சார கம்பியில், இவரது நிலத்தை ஒட்டியிருக்கும் நொடுஞ்சாலை துறைக்கு சொந்தமான மரத்தின் கிளைகள் உரசியுள்ளது. இதனால் கடந்த செப்டம்பர் 25ஆம் தேதி அன்று சுப்பிரமணியன் மரத்தின் கிளைகளை வெட்டியுள்ளார். இதனையறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற மருங்காபுரி வட்டாட்சியர் லட்சுமி, சுப்பிரமணியனை சந்தித்து இது தொடர்பாக விசாரித்துள்ளார். அப்போது ரூ.30,000 லஞ்சமாக கொடுக்குமாறு லட்சுமி கேட்டுள்ளார்.
பின்னர் பத்தாயிரமாவது கொடுக்க வேண்டும் என்றும், இல்லையென்றால் காவல்துறையில் புகார் அளித்து நடவடிக்கை எடுப்பேன் எனவும் சுப்ரமணியனை மிரட்டியுள்ளார். ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத சுப்பிரமணியன், வட்டாட்சியர் லட்சுமியின் மீது திருச்சி லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத் துறையினரின் அறிவுரையின் பேரில், நேற்று (அக்.3) மாலை விவசாயி சுப்ரமணியனிடம் ரூபாய் பத்தாயிரத்தை வட்டாட்சியர் லட்சுமி லஞ்சமாக பெற்றுள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு பிரிவு கண்காணிப்பாளர் மணிகண்டன் தலைமையிலான காவல்துறையினர் வட்டாட்சியர் லட்சுமியை கையும் களவுமாக பிடித்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலர் எனக்கூறி 10 லட்சம் மோசடி செய்ய முயன்றவர் கைது