திருச்சி வடக்கு, மத்திய, தெற்கு மாவட்டக் கழகங்களின் சார்பில் நேற்று (அக் 20ஆம் தேதி) திராவிட முன்னேற்ற கழகத்தின் முப்பெரும் விழா காணொலி காட்சி மூலம் நடைபெற்றது.
அக்கட்சியின் தலைவர் முக ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இ்ந்த விழாவில், திமுக முதன்மை செயலாளர் கே.என்.நேரு, திருச்சி வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி ந.தியாகராஜன், திருச்சி மத்திய மாவட்ட பொறுப்பாளர் வழக்கறிஞர் க.வைரமணி, திருச்சி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கலந்து கொண்டனர்.
விழாவில் பேசிய திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, " திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்னும் 200 நாள்களில் முதலமைச்சராவார். அதற்கு டெல்டா மாவட்டங்கள் உறுதுணையாக நிற்கும். ஸ்டாலின் முதலமைச்சராக பதவி ஏற்பதைக் காண மக்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். அவர் எவ்வித தடையுமின்றி முதலமைச்சராவர் எனத் உறுதிபடத் தெரிவித்தார்.
முன்னதாக பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், தமிழகக் கோட்டையை எவ்வளவு சீக்கிரம் கைப்பற்றுகிறோமோ அவ்வளவு உரிமைகளைப் பாதுகாக்க முடியும். சட்டமன்றமாக இருந்தாலும், நாடாளுமன்றமாக இருந்தாலும், நீதிமன்றமாக இருந்தாலும், மக்கள் மன்றமாக இருந்தாலும் - எங்கும் எதிலும் தமிழர் உரிமைகளை, தமிழ்நாட்டின் உரிமைகளை விட்டுத்தர மாட்டோம்.
நடக்க இருக்கிற தேர்தல் என்பது ஆட்சி மாற்றத்துக்காக தேர்தல் மட்டுமல்ல, தமிழர்களைக் காக்கும் பெரும் போர். தமிழர்களின் கல்வி, வேலைவாய்ப்பு உரிமைகளைக் காக்கும் பெரும் போர். அந்தப் போரில் வெல்வோம் எனக் கூறினார்.
மேலும், விழாவின் போது திருச்சி வடக்கு மாவட்டத்தில் 303 பேருக்கும், தெற்கு மாவட்டத்தில் 233 பேருக்கும், மத்திய மாவட்டத்தில் 350 பேருக்கும் பொற்கிழியினை அறிவித்தார்.